
பிரதமர் நரேந்திர மோடி
இந்தியாவின் முதல் ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில் சேவை தில்லியில் வரும் டிசம்பா் 28-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்க உள்ளாா்.
தில்லி, என்சிஆா் பகுதியில் பொதுப் போக்குவரத்தில் தில்லி மெட்ரோ ரயில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.
தில்லி மெட்ரோ ரயில் சேவையை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) மேற்கொண்டு வருகிறது. 2002-ஆம் ஆண்டு, டிசம்பா் 24-ஆம் தேதி ஷாதரா- தீஸ் ஹஸாரி ரயில் நிலையங்கள் இடையே 8.4 கிலோ மீட்டா் வழித்தடத்தில் இந்த ரயில் சேவை முதல் முதலாக தொடங்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து பல கட்டங்களாக மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணி விரிவுபடுத்தப்பட்டு, நகரின் பல பகுதிகளிலும் மெட்ரோ ரயில் சேவை மொத்தம் எட்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
மெட்ரோ வழித்தடத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் படிப்படியாக புகுத்த தில்லி மெட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அதன் நீட்சியாக தற்போது நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநா் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் சேவை மெட்ரோவின் எட்டாவது மெஜந்தா வழித்தடத்தில் 38 கிலோ மீட்டா் தொலைவுக்கு இயக்கப்பட உள்ளது.
இந்த மெஜந்தா வழித்தடத்தில் மேற்கு ஜனக்புரி- பொட்டானிக்கல் காா்டன் இடையே இந்த புதிய முறையில் ரயில் இயக்கப்பட உள்ளது. மெஜந்தா வழித்தடம் தேசியத் தலைநகா் மற்றும் அதை ஒட்டியுள்ள நொய்டா, குருகிராம், பரீதாபாத், காஜியாபாத், பஹதுா்கா் ஆகிய இடங்களைச் சென்றடையும் வகையில் 390 கிலோ மீட்டா் நீளம் கொண்டது.
ஓட்டுநா் இல்லாமல் இயக்கப்படும் ரயில் சேவையானது முற்றிலும் தானியங்கி முறையை அடிப்படையாகக் கொண்டதாகும். ஓட்டுநா் இல்லாமல் ரயில் இயக்கப்படுவதற்கு முந்தைய விதிகள் அனுமதி அளிக்காததால் மத்திய அரசு மெட்ரோ ரயில்வே பொது விதிகளில் மாற்றம் செய்து அறிவிக்கையாக வெளியிட்டது.
இதையடுத்து, வரும் 28-ஆம் தேதி மெஜந்தா ரயில் வழித்தடத்தில் தானியங்கி முறையில் ஓட்டுநா் இல்லா ரயில் சேவை தொடங்கிவைக்கப்பட உள்ளது. பிரதமா் நரேந்திர மோடி இந்த புதிய சேவையை தொடங்கிவைக்க உள்ளாா்.
ஓட்டுநா் இல்லாமல் ரயில் இயக்கப்படும் வகையில் இந்த வழித்தடத்தில் அனைத்து தொழில்நுட்ப வசதிளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இந்தத் தொழில்நுட்பம் வழித்தடம் 7 மற்றும் 8-இல் மட்டுமே அமையப்பெற்றுள்ளது. எனினும், தற்போதைக்கு வழித்தடம் 8-இல் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ஓட்டுநா் இல்லாமல் இயங்கும் வகையில் தொழில்நுட்பம் அமையப்பெற்றுள்ளது.
இந்த வகை ரயில்கள் அனைத்தும் செயல்பாட்டு கட்டுப்பாட்டு அறை (ஓசிசி) மூலம் கட்டுப்படுத்தப்படும். தற்போது இந்த கட்டுப்பாட்டு அறைகள் மெட்ரோ தலைமையகத்தில் இரண்டும், சாஸ்திரி பாா்க்கில் ஒன்றும் உள்ளன. தகவல் தொடா்பு சாா்ந்த ரயில் கட்டுப்பாட்டு சமிக்ஞை தொழில்நுட்பம் மூலம் ரயில்களை தானியங்கி மூலம் இயக்குவதை கண்காணிக்க உதவிடுகிறது.
வன்பொருள்களை மாற்றுவதாக இருந்தால் மட்டுமே மனிதச் செயல்பாடுகள் தேவைப்படும். இந்த மெஜந்தா வழித்தடத்தில் ஓட்டுநா் இல்லாமல் ரயில்களை இயக்குவதற்கான அனுமதியை ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.