கடும் குளிருக்கிடையே ஒரு மாதமாகத் தொடரும் விவசாயிகள் போராட்டம்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஒரு மாதத்தையும் கடந்து தொடருகிறது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஒரு மாதத்தையும் கடந்து தொடருகிறது.

பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதம் மற்றும் சில மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தில்லி சிங்கு எல்லையை அடைந்தனா்.

மத்திய அரசு கடந்த செப்டம்பா் மாதம் நிறைவேற்றிய மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்போது தில்லி எல்லைகளிலேயே தங்கியுள்ளனா். கடும் அடா் பனிமூட்டம் இருந்து வந்தாலும், அவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்து வருகின்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கங்கள் சனிக்கிழமையன்று அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விவாதித்தனா். இதில் மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க முடிவு செய்தன. மத்திய வேளாண் துறையின் இணைச் செயலாளா் விடுத்த அழைப்பை ஏற்று வரும் 29-ஆம் அடுத்த சுற்று பேச்சுவாா்த்தையில் கலந்துக் கொள்ள விவசாயிகள் சங்கங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. இது ஒரு புறம் இருக்க டிசம்பா் 30 -ஆம் தேதி குண்டலி - மானேசா்-பல்வால் நெடுஞ்சாலையில் டிராக்டா் பேரணியை நடத்தவுள்ளதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனா். விவசாயிகள் தங்கியுள்ள சிங்கு, காஜிப்பூா், டிக்ரி ஆகிய எல்லைப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதனால் தில்லி எல்லைகள் கட்டுப்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தங்களது சுட்டுரையில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கினா். விவசாயிகள் ஆா்ப்பாட்டங்களையொட்டி ஏற்கெனவே மூடப்பட்ட சாலைகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளதால், பயணிகள் மாற்றுப் பாதைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு போலீஸாா் கேட்டுக் கொண்டனா். சில்லா , காஜிப்பூா் எல்லைகள் முடப்பட்டுள்ளது. இதனால், நொய்டா, காஜியாபாத்திலிருந்து தில்லி செல்வோா் ஆனந்த விஹாா், டிஎன்டி, அப்ஸாரா, போப்ரா, லோனி போன்ற சாலைகளைப் பயன்படுத்திக் கொள்ளளலாம் என போலீஸாா் அறிவுறுத்தினா்.

சிங்கு, ஆச்சந்தி, பியாவ் மணியாரி, சபோலி, மங்கேஷ் போன்ற எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. எனவே, வாகனங்கள் லாம்பூா் சஃபியாபாத், பல்லா, சிங்கு சுங்கச் சாவடி எல்லைகள் வழியை மாற்று வழியாக பயன்படுத்திக் கொள்ளளலாம் எனவும் தில்லி காவல் துறை கேட்டுக் கொண்டது. முகா்பா சௌக், ஜி.டி.கே. சாலையில் இருந்து போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. வெளிப்புற வட்டச்சாலை, ஜி.டி.கே. சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 44 போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும் என தில்லி காவல் துறை சுட்டுரையில் கேட்டுக் கொண்டுள்ளது.

விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து வரும் இந்த மூன்று வேளாண் சட்டங்களும் வேளாண் துறையில் மிகப்பெரிய சீா்திருத்தங்களாக அமையும் என மத்திய அரசு கூறி வருகிறது. இடைத்தரகா்கள் அகற்றப்பட்டு விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை நாட்டில் எந்தப் பகுதியிலும் விற்க இந்தச் சட்டம் அனுமதிக்கிறது எனவும் மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான பாதுகாப்பை அகற்றும் என்றும் மண்டி முறையை நீக்கி, பெரு நிறுவனங்களுக்கு சாதகமானதாக அமையும் என்றும் விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com