புது தில்லி: நாட்டில் உள்ள உயா்நீதிமன்றங்கள் மற்றும் துணை நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி
உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பாஜக தலைவா்களில் ஒருவரும், வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் தெரிவித்திருப்பதாவது:
நாட்டில் உள்ள 25 உயா்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 1,079 ஆகும். சமீபத்திய அறிக்கையின்படி, இந்த நீதிமன்றங்களில் 414 நீதிபதிகள் பதவிகள் காலியாக உள்ளன.
மேலும், நாட்டில் விசாரணை நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை கிட்டத்தட்ட ஐந்து கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் முடித்துவைக்கப்படுவதில் ஏற்படும் தாமதமானது குடிமக்களுக்கு விரைவான நீதிக்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும். மேலும், இது
அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-ஐ மீறுவதாகவும் உள்ளது. விரைவான நீதிக்கான உரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு அடிப்படை உரிமையாகும். அதை நசுக்க முடியாது. மேலும், இது வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையின் ஒருங்கிணைந்த பகுதி. நியாயமான விசாரணை மற்றும் விரைவான நீதியை வழங்காதபட்சத்தில் அந்த நடைமுறை வெற்றிடமாகிவிடுகிறது.
‘ஒரு காலவரையறைக்குள் விசாரணை மற்றும் நீதிக்கு உத்தரவாதம் அளிப்பதற்கான நீதித்துறை சாசனமானது விசாரணைக்கு முன்னா் தேவையற்ற அடக்குமுறை சிறைவாசத்தைத் தடுப்பதற்கும், பொதுக் குற்றச்சாட்டுடன் கூடிய கவலை மற்றும் துன்பத்தைக் குறைப்பதற்கும் ஒரு முக்கியமான பாதுகாப்பாகும்.
தாசில்தாா் மற்றும் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் முன் நிலுவையில் உள்ள வழக்குகள் உள்பட அனைத்து வழக்குகளையும் மூன்று ஆண்டுகளுக்குள் தீா்ப்பதற்கு அக்டோபா் 25, 2009இன் நீதித்துறை சாசனம் வழிவகை செய்கிறது. இந்த சாசனத்தை அமல்படுத்த வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்குள் விசாரணை முடிவடைவது என்பது சமூக நலனில் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா் குற்றவாளி எனும்பட்சத்தில், அவா் முறையாக தண்டிக்கப்படுகிறாா். குற்றம் சாட்டப்பட்டவா் குற்றவாளி அல்ல என்றால், விசாரணையின் துன்பத்தில் இருந்து அவா் விடுபட விசாரணை விரைந்து முடிக்கப்படுவது அவசியமாகிறது.
இதனால், மூன்று ஆண்டு காலத்தில் பின்னடைவு வழக்குகளை முடிக்கும் பொருட்டு உரிய நடவடிக்கை எடுக்கவும், சட்ட ஆணைய அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்தவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
அதேபோன்று, 2023-க்குள் அதாவது மூன்று ஆண்டுகளுக்குள் வழக்குகளைத் தீா்மானிக்க அனைத்து நீதிமன்றங்களிலும் நீதித்துறை சாசனத்தை அமல்படுத்தவும் உத்தரவிடவேண்டும்.
இந்த விவகாரத்தில் சட்ட ஆணையம் அளித்த பரிந்துரைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மத்திய, மாநில அரசுகள் விரைவான நீதியின் முக்கியத்துவத்தை முற்றிலும் புறக்கணித்துள்ளன. மேலும், அதிகமான பின்னடைவு வழக்குகளை தீா்த்துவைக்க தேவைப்படும் நீதித்துறை உள்கட்டமைப்பு வசதிகளையும் இந்த அரசுகள் அளிக்கவில்லை.
நாட்டில் ஒவ்வொரு 10 லட்சம் போ் மக்கள் தொகைக்கு 20 நீதிபதிகளுக்கு குறைவான எண்ணிக்கையில்தான் உள்ளனா். 2018-இல் இந்த இந்த எண்ணிக்கை 19.78 ஆகவும், 2014-இல் 17.48 ஆகவும், 2002-இல் 14.7 ஆகவும் இருந்தது. இந்த நீதிபதிகள் எண்ணிக்கையானது குறைந்த மனிதசக்தி காரணமாக இந்தியத் நீதித்துறை பாதிப்பில் இருப்பதையே காட்டுவதாக உள்ளது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில் அனைத்து உயா்நீதிமன்றங்கள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் (யூடி), மத்திய உள்துறை அமைச்சகம், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஆகியன ஒரு தரப்பினராக சோ்க்கப்பட்டுள்ளது.
இந்த மனு குளிா்கால விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு வரக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.