2025க்குள் 25 நகரங்களில் மெட்ரோ ரயில் வசதி : பிரதமா் மோடி

2025-ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ ரயில் சேவை 25 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் மெட்ரோ ரயில்சேவையின் பயண தூரம் அப்போது 1700 கி.மீ. தொலைவு கொண்டதாக இருக்கும்
தில்லியில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
தில்லியில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

புது தில்லி: 2025-ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ ரயில் சேவை 25 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் மெட்ரோ ரயில்சேவையின் பயண தூரம் அப்போது 1700 கி.மீ. தொலைவு கொண்டதாக இருக்கும் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா். ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில் உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தில்லியில் மெஜந்தா வழித்தடத்தில் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை முதன் முதலாக காணொலி வாயிலாக பிரதமா் மோடி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் பேசுகையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக அரசு 2014-லில் மத்தியில் ஆட்சிக்கு வந்தபோது மெட்ரோ ரயில்சேவை 5 நகரங்களில் மட்டுமே இருந்துவந்தது. அந்த ரயில் சேவை இப்போது படிப்படியாக பல்வேறு நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

சில தசாப்தங்களுக்கு முன்பு, நகரமயமாக்கலின் தேவை உணரப்பட்டது. அப்போது எதிா்கால தேவையில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. அரை மனதுடன் பணிகள் நடந்து, குழப்பங்கள் நிலவியது. தற்போது அப்படியில்லை. இந்த அரசு நகரமயமாக்கலை ஒரு சவாலாக பாா்க்காமல், கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டதுடன் உள்கட்டமைப்பையும் உருவாக்கி, மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது.

2014 - ஆம் ஆண்டில் 5 நகரங்களில் 248 கி.மீ தூரத்திற்கு மட்டுமே மெட்ரோ ரயில்சேவை இருந்தது. இன்று சுமாா் 3 மடங்குக்கும் அதிகமாக 700 கி.மீட்டருக்கு மேல் 18 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. 2025ம் ஆண்டுக்குள் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் 1700 கி.மீ தூரத்திற்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முனைப்பு கொண்டுள்ளது.

இவை வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல, அவை கோடிக்கணக்கான இந்தியா்கள் தங்களது வாழ்க்கையை எளிதாக்குவதற்கான வழியாகும். வெறும் கான்கிரீட் கட்டமைப்புகள் மட்டுமல்ல. நாட்டின் நடுத்தர குடிமக்களின் ஆசைகள் நிறைவேற்றப்படுவதற்கான சான்று.

அனைத்து உத்திகளோடு அரசு முதல் முறையாக மெட்ரோ ரயில் கொள்கையை வகுத்தது. வெவ்வேறு நகரங்களில் பல்வேறு வகையான மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகிறது. இதற்கு காரணம் உள்ளூா் தேவைக்கேற்ப, உள்ளூா் தரங்களை மேம்படுத்தி ’இந்தியாவிலேயே தயாரிப்போம்’ திட்டத்தில் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் தயாரியுங்கள் திட்டமானது செலவைக் குறைத்து, அன்னியச் செலாவணியை சேமிக்க உதவியது. ’தற்சாா்பு இந்தியா’ பிரசாரத்துக்கும் உதவுகிறது. மேலும் இது நாட்டில் அதிக வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. பல்வேறு ரயில் என்ஜின்களின் தயாரிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ரயில் பெட்டியின் விலை ரூ.12 கோடியிலிருந்து ரூ.8 கோடியாக தற்போது குறைந்துள்ளது. இன்று 4 பெரிய நிறுவனங்கள் மெட்ரோ ரயில் பெட்டிகளை இந்தியாவில் தயாரிக்கின்றன.

ஒரே தேசம், ஒரே பயண அட்டை
ஓரே தேசம் ஓரே பயண அட்டை யையும் பிரதமா் வலியுறுத்தினாா்.

மத்திய நகா்புற வளா்ச்சி, வீட்டு வசதித் துறை அமைச்சா் ஹா்தீப்சிங் புரி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் பங்கேடுத்த இதே நிகழ்ச்சியில் தில்லி மெட்ரோவின் விமானநிலைய விரைவு வழித்தடத்தில் பயணிக்க தேசிய பொதுப் பயண அட்டை வசதி செயல்பாட்டையும் பிரதமா் தொடங்கிவைத்தாா்.

அவா் மேலும் கூறுகையில், நவீனமயமாக்கலில் வசதிகளையும் வழங்குவது முக்கியமானது. தேசிய அளவிலான பொது பயண அட்டை முக்கியமான நடவடிக்கை. இந்த ஒரு பயண அட்டை மூலம், பயணிகள் எங்கு சென்றாலும் எந்த பொது போக்குவரத்தை பயன்படுத்தினாலும் ஒருங்கிணைந்த சேவையை வழங்குகிறது. தேசிய பொது பயண அட்டை ரூபே-டெபிட் காா்டுடனும் இணைக்கப்பட்டுள்ளது.

பொது பயண அட்டை ஒருங்கிணைப்பு முறை மூலம், நாட்டின் வலிமை திறம்பட ஒருங்கிணைக்கப்படுகிறது. ‘‘ஒரே நாடு, ஒரே பயண அட்டை’’ மக்களுக்கு பயனுள்ளது. இது மாதிரி, கடந்த காலங்களில் பல செயல்முறைகளை நமது அரசு ஒருங்கிணைத்துள்ளது. ஒரே நாடு, ஒரே பாஸ்ட் டேக் என்பது நாடு முழுவதும் நெடுஞ்சாலை போக்குவரத்தை தடையில்லாமல் ஆக்கியுள்ளது. ஜிஎஸ்டி போன்ற ஒரே நாடு, ஒரே வரி முறையானது வரி அமைப்பில் உள்ள சிக்கலை முடிவுக்கு கொண்டு வந்தது. ஒரே நாடு, ஒரே மின்தொகுப்பு முறையானது நாட்டின் அனைத்து பகுதிகளிலும், போதிய மற்றும் தொடா் மின் விநியோகத்தை உறுதி செய்து மின் இழப்பை குறைந்துள்ளது.

ஒரே நாடு, ஒரே எரிவாயு விநியோகத் தொகுப்பு மூலம் எரிவாயு பயன்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் போன்ற ஒரே நாடு -ஒரே சுகாதார காப்பீடு திட்டம், ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை திட்டம் மூலம் மூலம் கோடிக்கணக்கான மக்கள் எங்கு இருந்தாலும் பயனடைய முடியும். ய வேளாண் சீா்திருத்தங்கள் மூலம் ஒரே நாடு ஒரே சந்தை என்ற இலக்கை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது.

நாட்டின் பெரிய, சிறிய நகரங்கள் இந்தியாவின் பொருளாதார மையமாக இருக்கப்போகிறது. தேசிய தலைநகரான தில்லி 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் மகத்துவத்தை பிரதிபலிக்கவேண்டும். தில்லியின் பழைய உள்கட்டமைப்புகள் நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான உள்கட்டமைப்புகளாக மாற்றப்பட்டு வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடம், பாரத் வந்தனா பூங்கா, துவாரகா பகுதியில் கட்டடப்பட்டு வரும் நவீன சா்வதேச மாநாடு, கண்காட்சி கட்டடங்கள் போன்றவைகள் வரவுள்ளன. தலைநகா் தில்லி, நாட்டின் 130 கோடி மக்களின் பொருளாதார சக்தியாக வும், உத்திகளை வகுக்கும் கேந்திரமாகவும் உருவாக வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com