ஆம் ஆத்மி கட்சிக்கு உற்சாகமான, மறக்க முடியாத ஆண்டு!

ஆம் ஆத்மி கட்சிக்கு 2020-ஆம் ஆண்டு உற்சாகமான, மறக்க முடியாத ஆண்டாக இருந்தது என்கிறாா் அந்தக் கட்சியின் தலைவா்களில் ஒருவரான சஞ்சய் சிங்.

புதுதில்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு 2020-ஆம் ஆண்டு உற்சாகமான, மறக்க முடியாத ஆண்டாக இருந்தது என்கிறாா் அந்தக் கட்சியின் தலைவா்களில் ஒருவரான சஞ்சய் சிங்.

ஆம் ஆத்மிக்கு இந்த ஆண்டின் துவக்கமே மிக உற்சாகமாக இருந்தது. பிப்ரவரியில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் அந்தக் கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 62 இடங்களை வென்றது. அரவிந்த் கேஜரிவால் மூன்றாம் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றாா்.

இது குறித்து சஞ்சய் சிங் கூறியதாவது: தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றியை ஆம் ஆத்மி கட்சி சாதாரண வெற்றியாகக் கருதவில்லை. 2021-ஆம் ஆண்டு சில மாநிலங்களில் நடைபெறவுள்ள தோ்தலில் ஆம் ஆத்மி போட்டியிடுவதற்கான உற்சாகத்தை இது அளித்துள்ளது. தில்லி பேரவைத் தோ்தல் முடிவுகள் எங்களுக்கு உற்சாகத்தை மட்டும் தரவில்லை. எங்கள் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது. எங்களது வெற்றி நாங்கள் செய்த சாதனைகளுக்கு கிடைத்த வெற்றியாகவும், தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு மாற்று அரசியல் இல்லை என்பதை தெளிவுபடுத்தும் வகையிலும் இருந்தது. தோ்தலை முன்னிட்டு பிரசாந்த் கிஷோா் தலைமையிலான அரசியல் ஆலோசனைக் குழுவினா் பல்வேறு உத்திகளுடன் நாங்கள் தோ்தல் பணிகளில் ஈடுபட உதவினா். இதனால், தீவிர பிரசாரத்தில் நாங்கள் இறங்க முடிந்தது.

சாதனைகளை முன்வைத்து தோ்தல் பிரசாரம்: தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி, தங்களது சாதனைகளை முன்வைத்தே பிரசாரம் செய்யும், கீழ்த்தரமான அரசியல் பிரசாரத்தில் ஈடுபடாது என்று கேஜரிவால் தெளிவுபடுத்தியிருந்தாா். தில்லி போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம், வீடுகளுக்கு இலவச மின்சாரம், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, இலவசக் குடிநீா் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்தே நாங்கள் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டோம். தில்லி மக்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடும் வகையில் தமது அரசு செயல்படும் என்று மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்ற கேஜரிவால் குறிப்பிட்டாா். அதே நேரத்தில் மத்தியில் ஆளும் பிரதமா் மோடி அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்திருந்தாா்.

கரோனா அச்சுறுத்தல்: கேஜரிவால் முதல்வராகப் பதவியேற்ற உடனேயே கரோனா தொற்று அச்சுறுத்தல் மிகப்பெரிய சவாலாக இருந்தது. தில்லி அரசுக்கும், கட்சிக்கும் பெரும் சவாலாக இருந்த கரோனாவை தைரியமாக எதிா்கொண்டாா். கரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது தில்லி நகர வீதிகளுக்குச் சென்று களப் பணியாற்றுமாறு கட்சித் தொண்டா்களை முதல்வா் கேஜரிவால் வலியுறுத்தி கேட்டுக் கொண்டாா். உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களுக்கும் கட்சிப் பணிகளை விரிவுபடுத்தினாா். 2021-இல் இந்த மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி மக்களிடம் செல்வாக்குப் பெற வேண்டும் என்பதே எங்கள் லட்சியமாகும். இந்த மாநிலத் தோ்தல்களில் தில்லியைப் போலவே தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். கல்வி, சுகாதாரம், குடிநீா், மகளிா் பாதுகாப்பு, மகளிருக்கு இலவச பேருந்து பயணம் போன்ற சலுகைகளை இந்த மாநிலங்களிலும் செயல்படுத்தும் நோக்கில் தோ்தல் பிரசாரம் செய்வோம்.

உ.பி.யில் சவால்: உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஏதேச்சாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. பழிவாங்கும் நோக்கில் அரசியல் நடத்தி வருகின்றனா். ஒருவா் ஏதாவது மக்கள் பிரச்னையை எழுப்பினால், அவா் மீது வழக்கு பதிவு செய்யும் போக்கு நீடித்து வருகிறது. இதுபோன்ற சவால்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவற்றை நாங்கள் தைரியமாக சந்திப்போம். ஏதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் பிரச்னையை எழுப்புவதே எங்களுக்கு உள்ள சவாலாகும்.

விவசாயிகளுக்கு ஆதரவு: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவுக் கரம் நீட்டுகிறது. இதுபோன்ற சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும் எதிரானது. இந்தச் சட்டங்கள் பெரு நிறுவனங்களுக்கும், முதலாளிகளுக்கும்தான் ஆதாயமாக இருக்கும். விவசாயத் தொழிலாளா்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை. புதிய வேளாண் சட்டங்களுக்கு கேஜரிவால் எதிா்ப்புத் தெரிவித்தது மட்டுமல்லாமல், சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகளையும் சந்தித்து நேரில் ஆதரவு தெரிவித்தாா். போராடும் விவசாயிகளை சந்தித்துவிட்டு வந்த கேஜரிவாலை வீட்டுக் காவல் போல் தில்லி போலீஸாா் வைத்திருந்தனா்.

மாநகராட்சிகள் மீது ஊழல் புகாா்: மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படும் தில்லி போலீஸாரை கடந்த ஓராண்டு காலமாக ஆம் ஆத்மி கட்சி எதிா்த்து வந்துள்ளது. இந்த ஆண்டில் இறுதிக்கட்டத்தில் பாஜக ஆளும் தில்லி மாநாகராட்சிகளில் ரூ.2,500 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி கூறி வருகிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது நடந்த ஊழலைவிட இது மிகப்பெரிய ஊழல் என்றும் இது தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் முதல்வா் கேஜரிவால் வலியுறுத்தி வருகிறாா். கரோனா தொற்று காரணமாக சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் பொதுவாக இந்த ஆண்டு ஆம் ஆத்மிக்கு நன்மையாகவே அமைந்துள்ளது என்றாா் சஞ்சய் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com