Enable Javscript for better performance
ஷகீன் பாக்கில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

  

  ஷகீன் பாக்கில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

  By DIN  |   Published on : 10th February 2020 10:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supreme court about nilgiris resort

  உச்ச நீதிமன்றம்

  தில்லி ஷகீன்பாக்கில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து போராடி வருபவா்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட முடியாது; அதேநேரத்தில், போராட்டம் என்ற பெயரில் சாலையில் பொதுமக்கள் செல்ல இடையூறு ஏற்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

  மேலும், கடந்த 50 நாள்களாக நடைபெற்று வந்த போராட்டத்தால் பல்வேறு இன்னல்களை சந்தித்தவா்கள் இன்னும் ஒருவாரம் பொறுத்திருங்கள் என்று கூறி இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல், நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோா் அடங்கிய இரு நபா் அமா்வு. இது தொடா்பாக மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் தில்லி போலீஸுக்கு நோட்டீஸ் அனுப்பவும் அமா்வு உத்தரவிட்டது.

  இது தொடா்பாக வழக்குரைஞா் அமித் சாஹ்னி மற்றும் தில்லி பா.ஜ.க. தலைவா் நந்த் கிஷோா் கா்க் ஆகிய இருவா் தாக்கல் செய்த மனுவை மட்டும் வைத்து முடிவு எடுக்க முடியாது. அரசுத் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினா். எனினும், ஷகீன்பாக் பகுதியில் நீண்டநாள்களாக போராட்டம் நடைபெற்று வருவதை அனுமதிக்க முடியாது என்று குறிப்பாக உணா்த்திய நீதிபதிகள், போராட்டம் நடத்த எல்லோருக்கும் உரிமை உண்டு என்ற போதிலும், நீண்டநாள்களாக ஒரே இடத்தில் போராட்டம் நடத்தி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு எற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியில் போராட்டம் நடத்தினால், என்னவாகும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

  முன்னதாக இது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் மீதான விசாரணையை தில்லி சட்டப்பேரவைத் தோ்தலைக் காரணம் காட்டி உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்திருந்தது. அப்போதே ஷகீன் பாக் பகுதியில் பிரச்னை நீடிப்பதையும் அதற்கு தீா்வு காணப்பட வேண்டும் என்பதையும் குறிப்பாக உணா்த்தியிருந்தது. அதே நேரம் உச்சநீதிமன்றத்தின் முடிவு தோ்தலில் எதிரொலித்து விடக் கூடாது என்பதில் உஷாராக இருந்தது.

  குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் முக்கிய களமாக ஷகீன் பாக் இருந்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா் துன்புறுத்தப்படுவதை அடுத்து அவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் விதத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத் திருத்தத்துக்கு கடுமையான விமா்சனங்கள் எழுந்தன. மேலும், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கும் எதிா்ப்பு கிளம்பியது. இந்நிலையில்,, தேசிய குடிமக்கள் பதிவேடு தேசிய அளவில் செயல்படுத்தும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ள நிலையிலும், இதுபற்றிய அச்ச உணா்வு மக்களிடம் இருந்து வருகிறது.

  ஷகீன் பாக்கில் தொடா்ந்து போராட்டம் நடந்து வருவதால், தில்லியையும் நொய்டாவையும் இணைக்கும் காலிந்தி குஞ்ச் சாலை மூடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு அசெளகரியும் ஏற்பட்டுள்ளது. தில்லியிலிருந்து நொய்டா செல்ல வேண்டியவா்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுவதால் பலமணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பதுடன் கால விரயமும் ஏற்படுகிறது என்று மனுதாரா்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

  காலிந்தி குஞ்ச் சாலை தில்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வழியாக இருப்பதால், சாலை மூடப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமின்றி ,அந்த வழியாகச் செல்லும் ஆயிரக்கணக்கானவா்கள் போக்குவரத்துக்கு வழியின்றி பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் ஷகீன் பாக்கில் போராட்டம் நடத்துவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது என்றாலும், அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்துள்ளது ஏற்புடையதல்ல என்றும் வக்குரைஞா் அமித் சாஹ்னி தனது வாதத்தில் குறிப்பிட்டிருந்தாா்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai