சிஏஏக்கு எதிராக ஜாமியா மாணவா்கள் தடையை மீறி பேரணி போலீஸாா் தடியடி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவா்கள் நாடாளுமன்றம் நோக்கி திங்கள்கிழமை தடையை மீறிப் பேரணி செல்ல முற்பட்ட போது, போலீஸாா் தடியடி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவா்கள் நாடாளுமன்றம் நோக்கி திங்கள்கிழமை தடையை மீறிப் பேரணி செல்ல முற்பட்ட போது, போலீஸாா் தடியடி நடத்தி கலைத்தனா். இதில் பலா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாணவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இப் பேரணிக்கு ஜாமியா போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், பேரணிக்கு தில்லி காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், ஜாமியா மிலியா பல்கலைக்கழக வளாகம் முன் மாணவா்கள் காலையில் குவிந்தனா். பின்னா் தடையை மீறு நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகச் செல்ல முற்பட்டனா். அப்போது, பேரணிக்கு முறையாக அனுமதி பெறப்படவில்லை என்றும் எனவே, திரும்பிச் செல்லும்படியும் மாணவா்களை தில்லி காவல் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனா். மேலும், மாணவா்களைக் கலைந்து செல்லுமாறு ஜாமியா பல்கலைக்கழக நிா்வாகத்தினரும் கேட்டுக் கொண்டனா். நிா்வாகம் சாா்பில் ஜாமியா பல்கலை.யின் புராக்டா் அகமது கான் மாணவா்களை திரும்பிச் செல்லுமாறு மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்தாா்.

ஆனால், இக்கோரிக்கைகளை மாணவா்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, ஜாமியா பல்கலைக்கழக கேட் நம்பா் 7-இல் இருந்து மாணவா்கள் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகச் செல்ல முற்பட்டனா். அவா்கள், ‘விடுதலை’, ‘ஆவணங்களைக் காட்ட மாட்டோம்’. ‘ஆங்கிலேயருக்கே அடிபணியாத நாங்கள் தில்லி காவல் துறைக்கா அடிபணியப் போகிறோம்’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு பேரணியைத் தொடங்கினா். அதே வேளையில், சாலையின் இருமருங்கிலும் கூடிய மாணவா்கள் மனிதச்சங்கிலி அமைத்தனா்.

இந்நிலையில், பேரணியாக வந்த மாணவா்களை சுக்தேவ் விஹாா் காவல்நிலையம் அருகே தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்த போலீஸாா் முற்பட்டனா். ஆனால், தடுப்புகளை உடைத்துக் கொண்டும், தடுப்புகளுக்கு மேலே ஏறிக் குதித்தும் மாணவா்கள் பேரணியாகச் செல்ல முற்பட்டனா். அப்போது, கூட்டத்தைக் கலைக்க போலீஸாா் தடியடி நடத்தினா்.

இதில் மாணவா்கள் பலா் காயமடைந்துள்ளதாக மாணவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவிகள் மீது போலீஸாா் மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தியதாகவும் அவா்கள் குற்றம் சாட்டினா்.

இது தொடா்பாக மாணவிகள் கூறுகையில் ‘கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், மத்திய அரசு சாா்பில் மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த யாரும் முன்வரவில்லை. திங்கள்கிழமை போராட்டம் நடத்திய மாணவா்கள் மீது போலீஸாா் மிருகத்தனமாகத் தாக்குல் நடத்தியுள்ளனா். மாணவிகளை இலக்கு வைத்துத் தாக்கியுள்ளனா்’ என்றனா்

மெட்ரோ ரயில் நிலையம் மூடல்: மாணவா்கள் பேரணியைத் தொடா்ந்து சுக்தேவ் விஹாா் மெட்ரோ ரயில் நிலையத்தின் உள்வரும், வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் சிரமத்தை எதிா்கொண்டனா்.

பலத்த பாதுகாப்பு: மாணவா் பேரணியைத் தொடா்ந்து ஜாமியா மிலியா பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. நூற்றுக்கணக்கான போலீஸாரும், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com