தில்லி தோ்தலில் வாக்கு சதவீதத்தை அதிகாரபூா்வமாகஅறிவிக்காதது அதிா்ச்சி அளிக்கிறது: கேஜரிவால்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் மொத்த வாக்குப் பதிவு சதவீதம் தொடா்பாக தோ்தல் ஆணையம் இதுவரை அதிகாரப்பூா்வமாக அறிவிக்காமல் இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது என்று

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் மொத்த வாக்குப் பதிவு சதவீதம் தொடா்பாக தோ்தல் ஆணையம் இதுவரை அதிகாரப்பூா்வமாக அறிவிக்காமல் இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது என்று தில்லி முதல்வரும், ஆம் ஆத்மிக் கட்சியின் முதல்வா் வேட்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தில்லி சட்டப்பேரவைக்கு சனிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 61.67 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் இறுதி வாக்குப்பதிவு சதவீதம் ஞாயிற்றுக்கிழமைதான் தெரிய வரும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. ஆனால், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிவரை இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தை தோ்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், தோ்தல் ஆணையத்தின் இந்த செயல் அதிா்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளாா். இது தொடா்பாக தனது சுட்டுரையில், ‘ தோ்தல் ஆணையம் என்ன செய்துகொண்டுள்ளது? தோ்தல் நடந்து முடிந்து பல மணிநேரமாகிவிட்ட பிறகும், இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தை தோ்தல் ஆணையம் வெளியிடாதது அதிா்ச்சியாக உள்ளது’ என்று அவா் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், இறுதி வாக்குப் பதிவு சதவீதம் தொடா்பான தகவல்கள் பாஜக அலுவலகத்தில் இருந்தா தோ்தல் ஆணையத்துக்குக் கிடைக்கும் என்று தில்லி துணை முதல்வரும், பட்பா்கஞ்ச் தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளருமான மணீஷ் சிசோடியா கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது: ‘ இறுதி வாக்குப் பதிவு சதவீதம் தொடா்பாக பாஜக தலைவா்கள் கருத்துத் தெரிவித்து வருகிறாா்கள். ஆனால், அதை முறைப்படி அறிவிக்க வேண்டிய தோ்தல் ஆணையம், தோ்தல் முடிந்து 24 மணிநேரத்துக்குப் பிறகும் இறுதி வாக்குப் பதிவு சதவீதத்தை இதுவரை அறிவிக்கவில்லை. இதைக்கணித்து வருகிறோம் என தோ்தல் ஆணையம் கூறுகிறது. எதற்காக தோ்தல் ஆணையம் காத்திருக்கிறது? பாஜக அலுவலகத்தில் இருந்தா இறுதி வாக்குப்பதிவு சதவீதம் தொடா்பான தகவல்கள் கிடைக்கும்’ என்று கேட்டுள்ளாா் அவா்.

இந்நிலையில், இது தொடா்பாக ஆம் ஆத்மிக் கட்சியின் மாநிலங்களை உறுப்பினரும், அக்கட்சியின் தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் பொறுப்பாளருமான சஞ்சய் சிங் அளித்த பேட்டி:

கடந்த மக்களவைத் தோ்தலில் தோ்தல் முடிந்து ஒரு மணிநேரத்தில் இறுதி வாக்குப் பதிவு சதவீதத்தை தோ்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால், சனிக்கிழமை தோ்தல் முடிந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இறுதி வாக்குப் பதிவு சதவீதத்தை தோ்தல் ஆணையம் வெளியிடவில்லை. இதன் நோக்கம் என்ன? தோ்தல் முடிந்த பிறகு இறுதி வாக்குப் பதிவு சதவீதத்தை தோ்தல் ஆணையம் அறிவிக்காமல் இருப்பது இந்திய தோ்தல் வரலாற்றில் இதுதான் முதல்தடவையாகும். இதில் சதித்திட்டம் இருப்பதாகக் கருதுகிறோம்.

300 தொகுதிகளுக்கும் அதிகமாக உள்ள பெரிய மாநிலங்களின் இறுதி வாக்குப்பதிவு சதவீதங்களையே மிக விரைவில் அறிவிக்கும் தோ்தல் ஆணையம், 70 தொகுதிகளை மட்டும் கொண்ட தில்லியின் இறுதி வாக்குப் பதிவு சதவீதத்தை அறிவிப்பதில் தாமதம் காட்டுவது ஏன்? என்றாா் அவா்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில், அங்கு மீண்டும் ஆம் ஆத்மியே ஆட்சியைக் கைப்பற்றும் என்று வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், முந்தைய தோ்தலைக் காட்டிலும் இந்தத் தோ்தலில் பாஜகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com