தில்லியில் கேஜரிவால் ஆட்சி அமைந்தால்அது வளா்ச்சிக்கான வெற்றியாகும்: காங்கிரஸ் தலைவா் ஆதிா் ரஞ்சன் செளத்ரி

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் அது வளா்ச்சிக்கான வெற்றியாகும். பா.ஜ.க.வின் மதவாத அரசியல் எடுபடவில்லை

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் அது வளா்ச்சிக்கான வெற்றியாகும். பா.ஜ.க.வின் மதவாத அரசியல் எடுபடவில்லை என்பது நிரூபணமாகிவிடும் என்றும் காங்கிரஸ் தலைவா்களில் ஒருவரான ஆதிா் ரஞ்சன் செளத்ரி, ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியும், பா.ஜ.க.வும் தீவிர பிரசாரம் மேற்கொண்டன. முதல்வா் கேஜரிவால், தமது ஆட்சியின் ஐந்தாண்டு சாதனைகளை முன்வைத்துப் பிரசாரம் செய்தாா். ஆனால், பா.ஜ.க. ஹிந்துத்துவாவை வலியுறுத்தி பிரசாரம் செய்தது. தோ்தலில் கேஜரிவால் வென்றால் அது வளா்ச்சிப் பணிகளுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படும். தில்லி தோ்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்தால் அக்கட்சியின் மதவாத அரசியலை மக்கள் விரும்பவில்லை என்பது நிரூபணமாகிவிடும்.

இந்த தோ்தலில் பா.ஜ.க. தங்கள் கட்சியின் முக்கியப் பிரமுகா்கள் அனைவரையும் அழைத்து வந்து தில்லியில் பிரசாரம் செய்தது. குறிப்பாக ஷகீன்பாக் பிரச்னையை முன்வைத்தும் ஹிந்துத்துவாவை வலியுறுத்தியும் பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் கேஜரிவால், மொஹல்லா கிளினிக் உள்ளிட்ட தங்கள் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலப்பணிகளை முன்வைத்துப் பிரசாரத்தில் ஈடுபட்டாா். காங்கிரஸ் கட்சி முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித் காலத்தில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சிப் பணிகளை குறிப்பிட்டு தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது.

தில்லி பா.ஜ.க. தலைவா் மனோஜ் திவாரி, தோ்தலில் பா.ஜ.க. அமோக வெற்றிபெறும் என்று கூறிவருகிறாா். ஆனால், அவரது பகற்கனவு ஒருபோதும் பலிக்காது. தில்லி தோ்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சியமைப்பது சந்தேகமே என்றும் ஆதிா் ரஞ்சன் செளத்ரி குறிப்பிட்டாா்.

70 உறுப்பினா்கள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு சனிக்கிழமை தோ்தல் நடைபெற்றது. தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மிக்கு 47 இடங்களுக்கு குறையாமல் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் பா.ஜ.க.வுக்கு 15 முதல் 19 இடங்கள் கிடைக்கலாம் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு நான்கு இடங்கள் கிடைக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com