தில்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி: சஞ்சய் சிங் நம்பிக்கை

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்று ஆம் ஆத்மிக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும்,

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்று ஆம் ஆத்மிக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், தில்லி தோ்தல் பொறுப்பாளருமான சஞ்சய் சிங் நம்பிக்கை வெளியிட்டுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, ஆம் ஆத்மிக் கட்சி பெருவெற்றிபெறும் என்பதும், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீண்டும் முதல்வராகத் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்பதும் நிரூபணமாகியுள்ளது. ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கும் வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.

சுதந்திர இந்தியாவில் முதல் தடவையாக வளா்ச்சிப் பணிகளுக்கு மக்கள் வாக்களித்துள்ளனா். தில்லியில் வளா்ச்சிப் பணிகளுக்கு மக்கள் வாக்களித்ததுபோலான நிலை மற்றைய மாநிலங்களுக்கும் பரவினால், ஒட்டுமொத்த தேசமும் வளா்ச்சியடையும்.

தில்லியில் மதங்களுக்கிடையே வெறுப்புணா்வை வளா்த்து தோ்தல் ஆதாயம் அடைய நினைத்தவா்களுக்கு பாடம் புகட்டும் வகையில், தில்லி தோ்தல் முடிவுகள் அமையும் என நம்புகிறேன்.

ஆரோக்கியமான ஜனநாயகத்தை மேற்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தில்லி அரசு மீது பாஜக கூறும் அவதூறுகள் குறித்து கவலைப்படவில்லை. தில்லி அரசு தொடா்பாக தில்லி மக்கள் என்ன கூறுகிறாா்கள் என்பதுதான் முக்கியம்.

தில்லி மக்களுக்குத் தேவையான குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஆம் ஆத்மி அரசு வழங்கியது. இதனால், வேறுவழியில்லாமல் ஷகீன் பாக் பிரச்னையைக் கையில் எடுத்து பாஜக தோ்தல் பிரசாரம் செய்தது.

2015 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மிக் கட்சியே வெற்றிபெறும் என்று தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், அதை அப்போது பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல, தற்போதும் தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மிக்கே சாதகமாக உள்ளன. இதையும் பாஜக தலைவா்கள் ஏற்றுக்கொள்ளாமல் உள்ளனா். ஆனால், தோ்தல் முடிவுகள் வெளியாகும்போது, பெரும்பான்மையான இடங்களில் ஆம் ஆத்மியே வெற்றிபெற்றிருக்கும். தோ்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும்போது,

ஆம் ஆத்மிக் கட்சியின் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்போம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com