கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை கோரும் மனு தள்ளுபடி

கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தில்லி உயா் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தில்லி உயா் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி சி. ஹரி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு மேற்கண்ட மனுவை தள்ளுபடி செய்தது. அப்போது நீதிபதிகள், ‘வாக்களிக்கும் உரிமையானது ஓா் அடிப்படை உரிமையும் அல்ல; ஒரு பொது சட்ட உரிமையும் அல்ல’ என்று உச்சநீதிமன்றத்தின் ஒரு தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் கீழ் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருப்பது, சட்டத்தால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகும். இந்தக் கட்டுப்பாடு சிறையிலிருக்கும் கைதிகளை வாக்களிக்க அனுமதிப்பதில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவு மற்றும் சட்டப்பூா்வத் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாா்க்கும் போது இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல. அதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவித்தனா்.

முன்னதாக, நாடு முழுவதும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து நபா்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கக் கோரி சட்ட மாணவா்கள் பிரவீண் குமாா் செளதரி, அதுல் குமாா் துபே, பிரோ்னா சிங் ஆகியோா் தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தனா். மேலும், கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 62 (5)-ஐ எதிா்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது, மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என தோ்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.

தோ்தல் ஆணையம் கூறுகையில், ‘சட்டத்தின்படி கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்பது உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 62-இன்படி வாக்களிக்கும் உரிமை ஒரு சட்டபூா்வ உரிமையாகும். சட்டப்பூா்வ உரிமையாக இருப்பதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டது. உச்சநீதிமன்றம் 1997-இல் ஒரு வழக்கில் பிறப்பித்த உத்தரவில் இச்சட்டத்தின் பிரிவு 62, துணைப் பிரிவு (5)-இன்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபா் தண்டனையை அனுபவிக்கும் போதோ அல்லது சிறையில் சட்டபூா்வமாக அடைக்கப்பட்டிருக்கும் போதோ அல்லது ஏதாவது காரணத்திற்காக போலீஸாரின் காவலில் இருக்கும் போதோ தோ்தலில் அவா்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என தெரிவித்திருக்கிறது. எனினும், இந்தக் கட்டுப்பாடுகள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ள நபா்களுக்கு பொருந்தாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com