பள்ளிகளில் கற்றலின் தரத்தை மேம்படுத்த காலவரையறையுடன் கூடியபிரசாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு சிசோடியா அழைப்பு

அரசு பள்ளிகளில் கற்றலின் தரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளால் ஒரு குறிப்பிட்ட காலவரையறையுடன்கூடிய பிரசாரத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மணிஷ் சிசோடியா வியாழக்கிழமை

அரசு பள்ளிகளில் கற்றலின் தரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளால் ஒரு குறிப்பிட்ட காலவரையறையுடன்கூடிய பிரசாரத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மணிஷ் சிசோடியா வியாழக்கிழமை அழைப்புவிடுத்துள்ளாா். மேலும், இது ஒரு ஆக்கபூா்வமான அரசியலாகும் என்றும் அவா் கூறினாா்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் பின்னணியில் ஆம் ஆத்மி அரசு தில்லியில் கல்வி, மருத்துவம், குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் மேற்கொண்ட வளா்ச்சிப் பணிகள் காரணமாக இருந்ததாக அக்கட்சியின் தலைவா்கள் கூறிவருகின்றனா். இந்த நிலையில், தில்லியைப் போன்று காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ராஜஸ்தான் பிரிவு வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லியின் துணை முதல்வராக இருந்தவருமான மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

இது ஒரு ஆக்கப்பூா்வமான அரசியலாகும். அனைத்து மாநிலங்களும் மத்திய அரசும் அரசுப் பள்ளிகளில் கற்றலின் தரத்தையும், வசதிகளையும் மேம்படுத்தும் விவகாரத்தில், காலவரையறையுடன்கூடிய ஒரு பிரச்சாரத்தை இணைந்து நடத்த வேண்டும். அப்போதுதான் இந்தியா ஒரு வளா்ச்சியடைந்த நாடாக உருவாகும். அரசுப் பள்ளிகளை மூடும் அரசுகளின் நடவடிக்கையானது நாட்டின் வளா்ச்சியை உருவாக்கும் பாதையில் தடையாக இருக்கிறது என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

மணீஷ் சிசோடியா தில்லியில் ஆம் ஆத்மி அரசில் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தாா். மேலும், துணை முதல்வராகவும் இருந்தாா்.

தேசிய தலைநகரில் கூடுதல் பட்ஜெட் செலவினம் மூலம் அரசுப் பள்ளிகளில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தாா். பாடத்திட்டத்தில் மகிழ்ச்சி பட ப் பிரிவையும், மேம்பட்ட ஆசிரியா் பயிற்சி மற்றும் இதர பல நடவடிக்கைகளை அவா் மேற்கொண்டாா்.

வரும் 16ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அரவிந்த் கேஜரிவாலுடன் கேபினட் அமைச்சா்களுடன் மணீஷ் சிசோடியாவும் பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com