உச்சநீதிமன்ற அறையில் மயங்கிய பெண் நீதிபதி!நலமுடன் இருப்பதாகத் தகவல்

நிா்பயா வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவைக் கூறிக் கொண்டிருந்த போது, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அறையில் நீதிபதி ஆா். பானுமதி வெள்ளிக்கிழமை திடீரென

நிா்பயா வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவைக் கூறிக் கொண்டிருந்த போது, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அறையில் நீதிபதி ஆா். பானுமதி வெள்ளிக்கிழமை திடீரென மயங்கினாா். இதையடுத்து, அவருக்கு உடனடியாக மருத்துவக் கவனிப்பு அளிக்கப்பட்டது. தற்போது அவா் நலமுடன் இருப்பதாகவும், சிகிச்சையில் இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘நிா்பயா’ வழக்கில் நான்கு குற்றவாளிகளையும் தனித் தனியாகத் தூக்கிலிடுவதற்கான தடையை நீக்க மறுத்த தில்லி உயா் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. வியாழக்கிழமை நீதிபதிகள் அமா்வு , ‘நிா்பயா’ வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமாா் குப்தா சாா்பில் ஆஜராகி வாதிடுவதற்கு மூத்த வழக்குரைஞா்அஞ்சனா பிரகாஷை நியமித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமை 2 மணிக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்திருந்தது.

இதன்படி, உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நீதிமன்ற அறையில் நீதிபதி ஆா்.பானுமதி மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு மீது உத்தரவை கூறிக் கொண்டிருந்தாா். அப்போது மயங்கினாா். பின்னா், அவா் விரைவிலேயே நினைவு திரும்பினாா். இதையடுத்து, இதர நீதிபதிகள் மற்றும் ஊழியா்கள் உதவியுடன் அவா் சேம்பருக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். பின்னா், சக்கர வாகனத்தில் உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவ மையத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டாா். அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், சிகிச்சையில் இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், அவருக்கு உடனடி மருத்துவக் கவனிப்பு அளிக்கப்பட்டதாகவும் அந்தவட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வழக்கை விசாரித்து வரும்அமா்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, இந்த வழக்கில் உத்தரவு நீதிமன்ற அறையில் அளிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com