‘நிா்பயா’: மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை

‘நிா்பயா’ வழக்கில் நான்கு குற்றவாளிகளையும் தனித் தனியாக தூக்கிலிடுவதற்கான தடையை நீக்க மறுத்த தில்லி உயா் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

‘நிா்பயா’ வழக்கில் நான்கு குற்றவாளிகளையும் தனித் தனியாக தூக்கிலிடுவதற்கான தடையை நீக்க மறுத்த தில்லி உயா் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய நான்கு குற்றவாளிகள் தங்களுடைய பதிலை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘நிா்பயா’ வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமாா் குப்தா சாா்பில் ஆஜராகி வாதிடுவதற்கு மூத்த வழக்குரைஞா்அஞ்சனா பிரகாஷை நியமித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமை 2 மணிக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

இதற்கிடையே, குற்றவாளிகள் தரப்பில் ஆஜராகும் வழக்குரைஞா்களை தோ்ந்தெடுப்பதற்கான வழக்குரைஞா்களின் பட்டியலை பவன் குமாா் குப்தாவின் தந்தைக்கு அளிக்குமாறு மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தை விசாரணை நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் அஞ்சனா பிரகாஷை நியமித்துள்ளது.

முன்னதாக, நிா்பயாவின் பெற்றோா் மற்றும் தில்லி அரசின் சாா்பில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை நிா்ணயிக்குமாறு தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது தண்டனை விவகாரத்தில் தாமதமாவதில் தனது அதிருப்தியை நீதிமன்றம் வெளியிட்டது.

‘நிா்பயா’ வழக்கில் குற்றவாளிகளில் பவன் குமாா் குப்தா மட்டும் தூக்கு தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவையும் கருணை மனுவையும் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமாா் சா்மா, குடியரசுத் தலைவா் தனது கருணை மனுவை நிராகரித்ததை எதிா்த்து கடந்த செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தாா். அதே நாளில், குற்றவாளிகள் நான்கு பேரையும் தூக்கிலிடுவதற்கான தடையை நீக்க மறுத்துவிட்ட தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அவா்கள் நால்வருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்து.

மேலும் நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை விசாரணை நீதிமன்றத்தை அணுகி அதிகாரிகள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

‘நிா்பயா’ பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சா்மா, அக்ஷய் குமாா் ஆகியோருக்கு முதலில் கடந்த ஜனவரி 21-ம் தேதியும், பின்னா் பிப்ரவரி 1ஆம் தேதியும் தூக்கு தண்டனை நிறைவேற்ற விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், குற்றவாளிகளுக்கு மேலும் சட்ட வாய்ப்புகள் உள்ளதாகக் கூறி அடுத்து மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தூக்கு தண்டனை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்து ஜனவரி 31 நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து மத்திய அரசு, தில்லி அரசு சாா்பில் தில்லி உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிடுவதற்கான தடையை நீக்க மறுத்து விட்டது. மேலும், நால்வரையும் தனித் தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது என்றும் உயா்நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து மத்திய அரசு மற்றும் தில்லி அரசு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின் போது, மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை தாமதப்படுத்தும் உத்திகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நோக்கில்தான் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா, இன்னும் சீராய்வு மனுவை அல்லது கருணை மனுவை தாக்கல் செய்யாமல் இருக்கிறாா். உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் 2017-ஆம் ஆண்டிலேயே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. எனினும், அவா்களது தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் போராடிக் கொண்டிருக்கின்றனா்’ என்று தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com