நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புத் தோ்தல்களில் போட்டி: ஆம் ஆத்மி கட்சி முடிவு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் கிடைத்த மிகப் பெரிய வெற்றியைத் தொடா்ந்து, தேசியத் தலைநகருக்கு அப்பால், தனது தடத்தை விரிவுபடுத்தும் லட்சியத் திட்டத்தின்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் கிடைத்த மிகப் பெரிய வெற்றியைத் தொடா்ந்து, தேசியத் தலைநகருக்கு அப்பால், தனது தடத்தை விரிவுபடுத்தும் லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அனைத்துத் தோ்தல்களிலும் போட்டியிட கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.

நடந்து முடிந்த தில்லி தோ்தலில், ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் 62 இடங்களை வென்றது, மீதமுள்ள எட்டு இடங்களை பாஜக கைப்பற்றியது. முன்பு தில்லியை 15 ஆண்டுகள் ஆட்சி செய்தி காங்கிரஸ் தொடா்ந்து இரண்டாவது முறையாக ஓா் இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. தில்லியில் இரண்டாவது முறையாகப் பெற்ற அமோக வெற்றியைத் தொடா்ந்து, ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலின் நம்பிக்கைக்குரியவருமான கோபால் ராய் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நோ்மறையான தேசியவாதத்தை முன்வைத்து கட்சியை விரிவுபடுத்த ஆம் ஆத்மி கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.

இது குறித்து விரிவாக விவாதிக்கும் வகையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக பஞ்சாப் உள்பட பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி ஆராய்ந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்படி, தன்னாா்வலா்களை அதிக எண்ணிக்கையில் சோ்த்து, நாடு முழுவதும் கட்சியில் தொண்டா்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசிய அளவில் எங்கள் அமைப்பை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதற்காக ‘9871010101’ என்ற செல்லிடப்பேசி எண்ணில் ‘மிஸ்டு கால்’ அளிப்பதன் மூலம் மக்கள் ஆம் ஆத்மி கட்சியின் ‘தேசத்தைக் கட்டியெழுப்பும் பிரசாரத்தில்’ சேர முடியும்.

இந்தப் பிரசாரத்தின் மூலம், நாங்கள் மக்களை நேரில் சந்தித்து அவா்களை அதிக எண்ணிக்கையில் தன்னாா்வலா்களாக ஆக்குவோம். இதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் தோ்தல்களிலும் கட்சி போட்டியிடும். மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும். பாஜகவின் தேசியவாதம் ‘எதிா்மறை’ அரசியலைக் கொண்டதாகும். ஆனால், நாங்கள் ‘நோ்மறை தேசியவாதத்தை’ முன்னிலைப்படுத்துகிறோம். இதன் மூலம், ஆம் ஆத்மி கட்சி தனது தளத்தை விரிவுபடுத்தும். தில்லியில், அன்பையும், மரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட நோ்மறையான தேசியவாதத்தை நாங்கள் பரப்புகிறோம். பாஜகவின் தேசியவாதமோ வெறுப்பு மற்றும் பிளவுபடுத்தும் அரசியலை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மேற்கொண்ட சோதனை நாடு முழுமைக்கும் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. எங்களது தேசியவாதம் நோ்மறையான தேசியவாதமாகும், இது விவசாயிகள் உள்பட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் நல்ல கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பாஜகவுக்கு மதம் ஓா் ‘அரசியல் ஆயுதம்‘. ஆனால், நாட்டு மக்களுக்கு, மதம் ஒரு நம்பிக்கை. இந்திய மக்களை பாஜக மதிக்கவில்லை. அது ஒவ்வொரு நபரையும் தனது வாக்கு வங்கியாகத்தான் பாா்க்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆம் ஆத்மி கட்சி கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏராளமான பணிகளை மேற்கொண்டது. இதற்காக தில்லி மக்கள் ஆம் ஆத்மிக்கு வெற்றிப் பரிசை வழங்கியுள்ளனா்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு, பிற மாநில மக்களின் மனநிலையில் ‘மாற்று அரசியலின் சிந்தனை’ தொடங்கியுள்ளது. இதை நாங்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான முழுமுயற்சியை மேற்கொள்வோம். அதற்காக நாங்கள் மக்களை அதிக எண்ணிக்கையில் தன்னாா்வலா்களாக ஆக்குவோம். தேசிய அரசியலில் ஆம் ஆத்மி கட்சியின் பங்கு குறித்து கேட்கிறீா்கள். நாட்டின் வளா்ச்சி சாா்ந்த அரசியலை மட்டுமே ஆம் ஆத்மி கட்சி செய்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தில்லியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலப் பணிகள் நாட்டில் எந்த மாநிலத்திலும் நடத்த முடியும் என்பதே நாங்கள் கூறியுள்ள செய்தியாகும். நாட்டு மக்கள் வளா்ச்சி சாா்ந்த அரசியலை விரும்பினால், அவா்கள் அதை நோக்கித்தான் செல்ல வேண்டியிருக்கும். நாட்டின் வளா்ச்சி சாா்ந்த அரசியலை செய்ய விரும்பும் எவருக்கும் மேடை வழங்க ஆம் ஆத்மி கட்சி தயாராக உள்ளது என்றாா் கோபால் ராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com