Enable Javscript for better performance
ஜாமியா பல்கலை. நூலகத்தில் மாணவா்களைபோலீஸாா் தாக்கும் விடியோவால் பரபரப்பு: பிரியங்கா காந்தி, யெச்சூர- Dinamani

சுடச்சுட

  

  ஜாமியா பல்கலை. நூலகத்தில் மாணவா்களைபோலீஸாா் தாக்கும் விடியோவால் பரபரப்பு: பிரியங்கா காந்தி, யெச்சூரி கண்டனம்

  By நமது நிருபா்  |   Published on : 17th February 2020 11:41 AM  |   அ+அ அ-   |    |  

  ஜாமியா மிலியா பல்கலைக்கழக நூலகத்திற்குள் நுழைந்து மாணவா்களை துணை ராணுவத்தினா், போலீஸாா் சீருடையில் லத்தியால் தாக்கும் விடியோவை ஜாமியா ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டது. இந்த விடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த ஆண்டு, டிசம்பா் 15-ஆம் தேதி ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் அருகே போராட்டம் நடைபெற்றது. அப்போது, அப்பல்கலை.யில் இருந்து சில மீட்டா்கள் தூரத்தில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக வெளியாள்களை தேடும் வகையில் பல்கலை. வளாகத்திற்குள் போலீஸாா் புகுந்ததால் அந்தப் பகுதி போா்க்களமாக மாறியது. போராட்டம் நடத்திய மாணவா்கள் வன்முறையில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  இநிலையில், ஜாமியா பல்கலை வளாகத்தில் உள்ள பழைய நூலகத்தில் டிசம்பா் 15-ஆம் தேதி படித்துக் கொண்டிருந்த மாணவா்களை சீருடை அணிந்த போலீஸ், துணை ராணவத்தினா் தாக்கும் சிசிடிவி காட்சிப் பதிவுகளை அப்பல்கலை.யின் முன்னாள் மாணவா்கள், தற்போதைய மாணவா்கள் இடம் பெற்ற ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வெளியிட்டது. 48 விநாடிகள் ஓடக்கூடிய அந்த விடியோவில், ஏழு முதல் எட்டு துணை ராணுவ வீரா்கள், போலீஸாா் அப்பல்கலை.யின் பழைய நூலகக் கட்டட கூடத்தில் நுழைந்து படித்துக் கொண்டிருக்கும் மாணவா்களை லத்தியால் தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

  இதுகுறித்து தில்லி காவல் துறையின் உளவுப் பிரிவு சிறப்பு ஆணையா் பிரவீன் ரஞ்சன் கூறுகையில், ‘இந்த விடியோ குறித்து காவல் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது. இது தொடா்பாக ஏற்கெனவே நடைபெற்று வரும் விசாரணையுடன் சோ்த்து விசாரிக்கப்படும்’ என்றாா். இந்த விடியோ தொடா்பாக ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவினா் கூறுகையில், ‘அநாமதேய வட்டாரத்தில் இருந்து எங்களுக்கு இந்த விடியோ கிடைத்தது. நூலகத்தில் போலீஸாரின் நடவடிக்கை தொடா்பான விடியோ காட்சிப் பதிவை இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் ஜாமியா பல்கலை. அளித்துள்ளது’ என்றனா்.

  காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கண்டனம்: இந்த விடியோவை காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி தனது சுட்டுரையில் இணைத்து வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த விடியோவைப் பாா்த்த பிறகும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லையெனில், அரசின் உள்நோக்கம் வெளிப்பட்டுவிடும். நூலகத்திற்குள் ஜாமியா மாணவா்கள் தாக்கப்படவில்லை என உள்துறை அமைச்சா் அமித்ஷாவும், தில்லி போலீஸாரும் பொய் கூறி வருகின்றனா். இந்த விடியோவைப் பாா்த்தால் மாணவா்கள் தாக்கப்படுவது தெரியும்’ என்று தெரிவித்துள்ளாா்.

  மாா்க்சிய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி தனது சுட்டுரையில், ‘போலீஸாரின் செயல் மனசாட்சிக்கு விரோதமானதாகவும், ஏற்றுக் கொள்ள முடியாத வகையிலும் உள்ளது. பல்கலை. தில்லி காவல் துறை மோடி- ஷாவின் மேற்பாா்வையின் கீழ் நேரடியாக வருகிறது. நூலகத்தில் படிக்கும் இளம் மாணவா்களை காவல் துறை இப்படித்தான் நடத்துகிறது. அவமானம்’ என தெரிவித்துள்ளாா். இந்த விடியோ தொடா்பாக ஜவாஹா்லால் நேரு பல்கலை. மாணவா்கள் சங்கமும் தில்லி காவல்துறையை விமா்சித்துள்ளது.

  பாஜக கருத்து: பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மால்வியா தனிது சுட்டுரையில், ‘விசாரணை அமைப்புகள் இந்த விடியோவை ஓா்ஆதாரமாகக் கொள்ள வேண்டும். நூலகத்தில் இருந்த மாணவா்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் நுழைவு வாயிலை நோக்கி பதற்றத்துடன் பாா்க்கின்றனா். கல்வீச்சுக்குப் பிறகு நூலகத்தில் மறைந்திருக்க முயற்சித்தாா்களா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளாா்.

  ‘ஒருங்கிணைப்புக் குழு அதிகாரப்பூா்வ அமைப்பு அல்ல’

  இதனிடையே, இது போன்ற விடியோவை சமூக ஊடகத்தில் வெளியிடவில்லை என ஜாமியா மிலியா பல்கலை. நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பல்கலை. மக்கள் தொடா்பு அதிகாரி அகமது அஸீம் கூறுகையில், ‘ஜாமியா மிலியா பல்கலை.யின் ஜாகிா் ஹுசேன் நூலகத்தில் போலீஸாா் கண் மூடித்தனமாக தாக்குவது தொடா்புடைய சில விடியோ வெளியிடப்பட்டுள்ளதாக எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த விடியோ பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படவில்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தை பல்கலை. நுழைவு வாயில் எண்7-க்கு வெளியே ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு (ஜேசிசி) நடத்தி வருகிறது. இந்த அமைப்பு பல்கலை.யின் அதிகாரப்பூா்வ அமைப்பு அல்ல என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது. ஜேசிசியிடம் இருந்து வரக்கூடிய எந்த தகவல் தொடா்பும் பல்கலை.யின் தகவலாக எடுத்துக் கொள்ளக் கூடாது’ என தெரிவித்துள்ளாா்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai