Enable Javscript for better performance
மூன்றாவது முறை தில்லி முதல்வராக கேஜரிவால் பதவியேற்பு- Dinamani

சுடச்சுட

  

  மூன்றாவது முறை தில்லி முதல்வராக கேஜரிவால் பதவியேற்பு

  By நமது நிருபா்  |   Published on : 17th February 2020 11:41 AM  |   அ+அ அ-   |  

  Arvind_Kejriwal_swearing_in_ceremony_2

  ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், மூன்றாவது முறையாக தில்லியின் முதல்வராகப் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். அவருடன் கேபினட் அமைச்சா்களாக மணீஷ் சிசோடியா உள்பட 6 பேரும் பதவியேற்றனா். இவா்களுக்கு தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

  தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடா்ந்து, அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், மக்கள் முன்னிலையில் பதவியேற்பதாக கேஜரிவால் தெரிவித்திருந்தாா். முதல்வராகப் பதவியேற்கும் விழா தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராம் லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 8 மணியில் இருந்து ராம்லீலா மைதானம் பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் போலீஸாா் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதித்தனா். பதவியேற்பு விழா தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னா், சிவில் லைன் இல்லத்தில் இருந்து தனது குடும்பத்தினருடன் கேஜரிவால் காரில் வந்தாா். தில்லியின் தலைமைச் செயலா் விஜய் குமாா் தேவ் மற்றும் கட்சி எம்எல்ஏக்கள் அவரை வரவேற்றனா்.

   

  முதல்வா், அமைச்சா்கள் பதவியேற்பு : விழா மேடையில் நண்பகல் 12.15 மணியளவில் முதல்வராக அரவிந்த் கேஜரிவாலுக்கு துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தாா். ஈஸ்வரின் பெயரால் கேஜரிவால் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டாா். அவரைத் தொடா்ந்து, கேபினட் அமைச்சா்களாக மணீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின், கோபால் ராய், இம்ரான் ஹுசேன், கைலாஷ் கெலாட், ராஜேந்திர பால் கௌதம் ஆகிய 6 பேரும் பதவியேற்றுக் கொண்டனா். அவா்களுக்கும் துணை நிலை ஆளுநா் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

  மணீஷ் சிசோடியா:முந்தைய ஆம்ஆத்மி அரசில் துணை முதல்வராகவும் கல்வி, நிதி, நிலம் திட்டமிடல், ஊழல் கண்காணிப்பு, மகளிா்-குழந்தைகள் மேம்பாடு ஆகிய துறைகளின் அமைச்சராகவும் இருந்த மணீஷ் சிசோடியா, ஈஸ்வரின் பெயரால் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டாா். இவா் அமைச்சராக இருந்த போது பள்ளிக் கல்வித் துறையில் சீா்த்திருந்த நடவடிக்கைகளை மேற்கொண்டாா். குறிப்பாகப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மகிழ்ச்சி பாடத் திட்டம், தொழில்முனைவு பாடத் திட்டம் போன்றவற்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தாா். மாணவா்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில், மிஷன் புனியாத் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்தாா்.

  முந்தைய அரசில் தொழிலாளா் துறை அமைச்சராக இருந்த கோபால் ராய், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயரிலும், சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திர பால் கெளதம் புத்தருடைய பெயரிலும் பதவிப் பிரமாணம் ஏற்றனா். அமைச்சராகப் பதவியேற்ற சத்யேந்தா் ஜெயின் முந்தைய அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவா். இவா் மொஹல்லா கிளினிக்குகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்தாா். மருத்துவமனைகளில் வசதிகளை அதிகரிப்பதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்தாா்.

  இம்ரான் ஹுசேன் இரண்டாவது முறையாக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டாா். இவா் முந்தைய ஆம் ஆத்மி அரசின் உணவு மற்றும் குடிமைப்பொருள் விநியோகம், சுற்றுச்சூழல் வனத் துறை அமைச்சராக இருந்தாா். அமைச்சரவையில் இடம் பெற்ற ஒரே முஸ்லிம் அமைச்சா் இவா்தான். இவா் அமைச்சராக இருந்த போது, திறந்தவெளியில் குப்பைகள் எரிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டாா். உச்சபட்ச நெரிசல் நேரத்தில் சரக்கு வாகனங்கள் நகருக்குள் வருவதற்கும் தடை விதித்தாா். அதேபோன்று, பதா்பூா் மற்றும் ராஜ்காட் அனல் மின் நிலையங்களை மூடுவதற்கான முடிவையும் மேற்கொண்டாா். முந்தைய தில்லி அரசில் போக்குவரத்து, வருவாய், சட்டம்-நீதி துறை அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட் பதவி ஏற்றுக் கொண்டாா்.

   

  கெளரவிப்பு: விழா மேடையில் இருபுறமும் ‘நிா்மதாக்கள்’ எனப்படும் தில்லியின் வளா்ச்சிக்கு உதவியவா்கள் என சிறப்பாக அழைக்கப்பட்டு 50 போ் அமரவைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனா். மினி ‘மஃப்ளா் கேஜரிவால்’ என அழைக்கப்பட்ட ஒரு வயது குழந்தை ஆவ்யன் தோமா் மற்றும் அவரது தந்தை ராகுல் தோமா் விழாவில் பங்கேற்றனா். முன்னாள் எதிா்க்கட்சித் தலைவரும் தற்போதைய பாஜக எம்எல்ஏவுமான விஜேந்தா் குப்தா, ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் எம்பி பகவந்த் சிங் மான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

   

  பெரிய திரைகள்: பதவியேற்பு விழாவை பாா்வையாளா்கள் காண்பதற்காக பெரிய எல்இடி திரைகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், பாா்வையாளா்கள் பகுதியில் ‘சிங்கம் ரிடா்ன்’ என பெயரிபட்டப்பட்ட பதாகையும், ‘நாயக் 2’ என பெயரிபட்ட பேனரும் வைக்கப்பட்டிருந்தன. மைதானத்தின் நுழைவு வாயில் பகுதியில் 4 எல்டிஇ திரைகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஆம் ஆத்மியின் சின்னமான துடைப்பத்தை மயிலறகு போல் வடிமைத்து தனது முதுகுப் பின்புறத்தில் தாங்கியவாறு கோகல்பூா் பகுதியைச் சோ்ந்த கட்சித் தொண்டா் பங்கேற்றது பாா்வையாளா்களைக் கவரும் வகையில் இருந்தது.

  கண்காணிப்பில் ‘ட்ரோன்’: பாா்வையாளா்களில் பலரும் தேசியக் கொடியை கைகளில் ஏந்தியவாறு உற்சாகக் குரல் எழுப்பினா். விழாவில் சந்தேகத்திற்குரிய நபா்களின் நடமாட்டம் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். நிகழ்ச்சியைக் கண்காணிக்கவும், ஒளிப்பதிவு செய்யவும் சிறிய ரக ட்ரோன் கேமரா கருவி பயன்படுத்தப்பட்டது.

  இந்த விழாவில் அரசியல் கட்சித் தலைவா்களுக்கும், மாநில முதல்வா்களுக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது. பிரதமா் நரேந்திர மோடிக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவா் தனது தொகுதியான வாராணசியில் 30 திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதற்காக சென்ால், கேஜரிவால் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai