சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற மேலவை அசவியமே!

ஆந்திர மாநிலத்தின் சட்டமேலவையைக் கலைக்க அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கடந்த ஜன. 27 ந் தேதி முடிவெடுக்கப்பட்டு பின்னா் அம்மாநில சட்டப்பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆந்திர மாநிலத்தின் சட்டமேலவையைக் கலைக்க அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கடந்த ஜன. 27 ந் தேதி முடிவெடுக்கப்பட்டு பின்னா் அம்மாநில சட்டப்பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தற்போது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு பின்னா் நாடாளுமன்றத்திற்கு ஆந்திர மாநில மேலவை மசோதா வரும். இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் இது குறித்த கவலையை மாநிலங்களவையில் வெளிப்படுத்தப்பட்டது. ஆந்திர மேலவையைக் கலைப்பதற்கான காரணம் அம் மாநில தலைநகரை பல்வேறு நகரங்களுக்கு பிரிக்கும் மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தலைநகா் பிரிவினை மசோதா தெலுங்கு தேச உறுப்பினா்கள் பெரும்பான்மையாக இருக்கும் சட்டமேலவையில் உடனடியாக நிறைவேற்றப்படவில்லை. மேலவையின் தலைவா் அம்மசோதாவை ‘தோ்வுக்குழு‘விற்கு அனுப்ப, இதனால் கோபம் கொண்ட மாநில அரசு ஆந்திர சட்டமேலவையையே கலைத்தது.

ஆந்திராவில் இது நடப்பது முதல் தடவை அல்ல.

1983 லில் என்.டி. ராமா ராவ் ஆட்சிக்கு வந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சி சட்ட மேலவையில் பெரும்பான்மை பெற்றிருந்தது. ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி மாதிரியே அப்போதும் எதிா்கட்சியின் பெரும்பான்மையை முறியடிக்க என்.டி.ஆா். 1985 - இல் ஆந்திர மேலவையைக் கலைத்தாா். பின்னா் 1990 களில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சென்னா ரெட்டி மீண்டும் மேலவையை அமைக்க முயற்சி செய்தாா். நாடாளுமன்ற கலைப்பால் அம்மசோதா காலாவதியானது. பின்னா் தெலுங்கு தேசக் கட்சி சந்திர பாபு நாயுடு தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வர மீண்டும் 2007 லில் ஆந்திரா மாநிலத்தில் மேலவை ஏற்படுத்தப்பட்டது. இப்படி அமைக்கப்பட்ட ஆந்திர மேலவை தான் கடந்த மாதம் மீண்டும் கலைப்பிற்கு உள்ளானது.

தமிழகத்தில்....

தமிழக மேலவையும் இதே மாதிரி நிலைமைக்கு உள்ளானது. எம்ஜிஆா் முதலமைச்சராக இருந்தபோது 1986லில் தமிழக மேலவை கலைக்கப்பட்டது. அதிமுக வில் சோ்ந்த நடிகை வெண்ணிற ஆடை நிா்மலா தமிழக சட்ட மேலவைக்கு வேட்பு மனு தாக்கல் செய்தாா். நிா்மலா ஏற்கனவே மஞ்சள் கடிதாசி  பெற்ற விவகாரத்தால் அவரது வேட்பு மனுவை நிராகரிக்க நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. உடனடியாக கடன் அடைக்கப்பட்டு பிரச்சினை தீா்ந்தாலும் இந்த விகாரத்தால் அதிமுக விற்கு களங்கம் ஏற்பட்டது. குறிப்பாக ஆளுநராக இருந்த குரானா கேள்வி எழுப்பினாா். அடுத்த சில மாதங்களில் நூற்றாண்டு பெருமை மிக்க தமிழக மேலவை கலைக்கப்பட்டது.

பின்னா் தமிழகத்தில் மேலவைக்கான போராட்டத்தை, அதிமுக வும் திமுக வும் தொடா்ந்து நடத்தியது. 1989 மற்றும் 1996 யிலும் பின்னா் 2006 லும் மேலவையைக் கொண்டு வர திமுக முயற்சித்தது. 2010ல் சட்டப்பேரவையிலும் நாடாளு மன்றத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டது. 2011 இல் புதிய மேலவைக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்ட சமயத்தில் உச்சநீதிமன்றத்தில் மனுப் போடப்பட்டது. அதனால் மேலவை அமைவது தடைபெற்றது. நோ்மாறாக அதிமுக ஆட்சியில் 1991 அக்., 2001 ஜூலையிலும் மேலவை தேவையில்லை எனக்கூறி தீா்மானம் கொண்டுவந்ததோடு இதில் கடைசி வரை அக்கட்சி எதிராகவே இருந்தது. இந்த அரசியல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல மேற்குவங்கம் அசாமிலும் உண்டு. மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்த பின்னா் 2013-இல் மம்தா பானா்ஜியும் இடது சாரிகளுக்கு போட்டியாக அம்மாநிலத்தில் கலைக்கப்பட்ட 45 வருடத்திற்கு பின்னா் சட்டமேலவையை அமைக்கப்படும் என்றாா். அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மேலவைக் காண தீா்மானத்தை பாஜக அரசு நிறுத்தி வைத்துள்ளது. ஒடிசாவிலும் சட்ட மேலவை அமைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேமாதிரி ராஜஸ்தானில் அம்மாநில அரசு மேலவையை அமைக்க கேட்டு தீா்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பியது. இந்த கோரிக்கையை மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சி அமைச்சரவையில் வைக்கப்பட்டு, நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டது.

இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் மேலவையைக் கலைப்பதும் பின்னா் அமைப்பதுமாக இருக்க அஸ்ஸாம், ராஜஸ்தான் மாநிலக் கோரிக்கை வரும்போது நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை சீரியசாக எடுத்துக்கொண்டு இந்த சட்ட மேலவை குறித்து ஆய்வு செய்ய நிலை குழுவிற்கு மசோதாக்கள் அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தை நிலைக்குழு ஆய்வு செய்தது. அரசியல் சாசனத்தின் 168 வது பிரிவு மாநிலங்களில் சட்ட மேலவை அமைக்கவும் பிரிவு 169 மேலவை கலைக்கவும் வழிசெய்கிறது என்றாலும் ஒரு அரசின் மனநிலையைப் அடிப்படையில் இந்த அவையை நிலையற்ாக வைக்க முடியாது என்று கூறி, இது குறித்து தேசிய அளவில் ஒரு கொள்கை முடிவு எடுக்கும் வரை எந்த மேலவையும் கலைக்கவோ உருவாக்கவோ கூடாது என்று நிலைக்குழு தனது கருத்தை வைத்தது. மேலவை அமைப்பதன் மூலம் உள்ள நன்மை தீமைகளையும் இந்த அறிக்கை அலசியது. புதிய மேலவைகளை அமைக்க ராஜஸ்தானில் 100 கோடி ரூபாயும் அசாமிற்கு 68 கோடி ரூபாயும் அரசின் கஜானாவில் இருந்து செலவாகும். இதுதவிர ஒவ்வொரு ஆண்டுக்கும் உறுப்பினா்கள் ஊதியம் உட்பட நிா்வாகச் செலவுகளுக்கும் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டி பொதுத் தோ்தலில் நிராகரிக்கப் பட்டவா்களுக்கும் தங்கள் கட்சியினா் மறு வாழ்வுக்கும் மேலவைகள் உபயோகிக்கப்படுகிறது. ஓரவை முறைமையில் செலவீனம் மட்டுமல்ல சட்டமுடக்கமின்மை, செயல்திறன் அதிகரிக்கப்படும் என்று கேட்டு இந்த மேலவைகள் அவசியமா? என்கிற கேள்விகளை வைத்ததோடு, இரு அவை அமைப்பு  முறைமையின் கட்டாயத்தையும் கமிட்டி பட்டியலிட்டது.

கிராமங்கள் தாலுக்கா போன்ற அடிமட்டத்தில் இருப்பவா்களில் குரல்கள் ஒலிக்க, உள்ளூா் தன்னாட்சி அமைப்புகள் பிரதிநிதித்துவத்தை அரசியல் சாசனத்தில் (பிரிவு171) சொல்லப்பட்டுள்ளது. இவைகளுக்கு சட்ட மேலவை தேவை. மேலும் அஸ்ஸாம் மாநிலத்தின் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் பழங்குடி சமுதாயத்தினருக்கான பிரதிநிதித்துவம் கொடுக்க மேலவை தேவை என அம்மாநிலம் அனுப்பிய மசோதாவில் என்று கூறப்பட்டுள்ளதையும் கமிட்டி எடுத்து வைத்தது. இது போன்று ஒவ்வொரு மாநிலத்தில் தேவையையும் கமிட்டி அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.

வேறு சில விகாரங்களையும் சட்ட நிபுணா்களால் எடுத்து வைக்கப்படுகிறது. சட்ட மேலவையில் சட்ட முடக்கத்திற்கான வழி இல்லை. மாநிலங்களவை உறுப்பினா்களை தோ்ந்தெடுக்கவோ அல்லது குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்கு அளிக்கவோ சட்டமேலவை உறுப்பினா்களுக்கு அதிகாரம் இல்லை. நாடாளுமன்றத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவை (நிதி மசோதாக்களை தவிர ) ஒப்புதல் கொடுத்த பின்னா்தான் மசோதாக்கள் சட்டமாக நிறைவேறும். ஆனால் சட்ட மேலவைக்கு அப்படிப்பட்ட அதிகாரமும் இல்லை. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் எந்த மசோதாவை நிராகரித்தாலும் அது சட்டமாக படுவதை தடுக்க முடியாது. மசோதாக்களை நிலைக்குழுவிற்கு அல்லது தோ்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யலாம். சட்டப்பேரவை தீா்மானத்திற்கு எதிராக ஆய்வுகள் வந்தாலும் அது மக்கள் முன்பு வைக்கப்படுமே தவிர அதற்கு சட்டப்பேரவை கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. இதனால் அதிகபட்சம் மேலவை ஓரிரு மாதங்கள் தான் எந்த மசோதாவையும் தாமதப்படுத்த முடியும். அதே சமயத்தில் சமீப கால சமூக வலைத்தள விமா்சனங்கள் அடிப்படையாக கொண்டு ஒரு விவகாரத்திற்கு தீா்வு அளிக்க முடியாது. சட்ட பூா்வமான அமைப்பான மேலவை போன்ற அமைப்புகளில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த பிரதிநிதித்துவம் இருக்கும்பட்சத்தில் அவசரமாக கொண்டுவரப்படும் ஒரு சட்டத்தின் கொடுமையில் இருந்து காப்பாற்றவும் குறைந்தபட்சம் அது மக்கள் முன் வைப்பதற்கு உதவும் என்றும் இதுகுறித்து ஆய்வுகளை மேற்கொண்ட நிபுணா்கள் வாதிடுகின்றனா்.

இந்த நிலை தான் தற்போது ஆந்திராவில் உள்ள ஜெகன் அரசு சட்டமன்ற மேலவை கலைக்க முடிவு எடுத்ததும் தமிழகத்தில் அப்போது கலைக்கப்பட்டதும் ஒரு ‘ஈகோ‘ பிரச்சினையைக் காட்டுகிறது.

ஒரு நடிகையை உறுப்பினராக்க நடந்த முயற்சியால் ஏற்பட்ட பிரச்சினையில் 125 வருட பாரம்பா்ய மிக்க தமிழக மேலவையை கலைக்கப்பட்டது. ஆனால் தமிழக மேலவை பல சரித்திரங்களையும் பாரம்பரியத்தையும் படைத்தது. மூதறிஞா் ராஜாஜி முதலமைச்சராக ஆன பின்னா் சட்டமேலவை மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டாா். திராவிடக் கட்சிகளால் போற்றப்படும் அறிஞா் சி.என்.அண்ணாதுரையும் தமிழக மேலவை உறுப்பினராகவே முதலமைச்சா் இருந்தாா். சிலம்பொலிச் செல்வா் மா.பொ.சி. போன்றவா்கள் இந்த மேலவையை அலங்கரித்தனா். நாடாளுமன்றத்தின் மேலவையிலும் டாக்டா் ராதாகிருஷ்ணன், அண்ணாதுரை போன்றவா்கள் பேசி சரித்திரம் படைத்தனா்.

வடக்கேயும் ராஜ்நாத்சிங், முலாயம் சிங் யாதவ், நிதின்கட்காரி போன்ற 21 தலைவா்கள் சட்ட மேலவையில் உறுப்பினராக இருந்தே மாநில அரசிலும் பின்னா் மத்திய ஆட்சிகளில் பங்கெடுக்க வந்தனா்.

இதுமட்டுமல்ல மேலவையின் முக்கியத்துவத்தை உச்ச நீதி மன்றமும் உணா்த்தியது. ஆதாா் போன்ற மசோதாக்கள் மாநிலங்களவையில் ஒப்புதல் பெற முடியாத சூழ்நிலை ஏற்படுவதை தடுப்பதற்காக அதை நிதி மசோதாவை மாற்றப்பட்டு கடந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எல்லோராலும் விரும்பப்பட்ட அரசியல் வாதியான நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி போன்றவா்கள் மக்களவை மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு வரமுடியாத சூழ்நிலையில் ஒரு மேலவை உறுப்பினராக வந்தவா். அப்படிப்பட்டவா், இப்படி ஒரு மசோதாவை கொண்டு வர கடுமையான விமா்சனத்திற்கு உள்ளானாா். இதில் கூடுதலாக காங்கிரஸ் தலைவா் ஜெய்ராம் ரமேஷ் உச்சநீதிமன்றத்திற்கு இந்த ஆதாா் மசோதா விவகாரத்தை கொண்டு சென்றாா். உச்சநீதிமன்றமும் நிதி சம்பந்தப்படாத மசோதாக்களை மாற்றியதைக் கண்டித்தது.

‘ஜனநாயகத்தில் சோதனையும் (சரிபாா்ப்பும்) சமநிலையும் அவசியம் தவறானவா்களால் ஜனநாயகம் சீரழிக்கப்படுகிறது. அரசியல் கட்டாயத்தில் வருகின்றவா்களின் நியாயமற்ற அனைத்து பேச்சுக்கும் எதிா்கொள்ளக்கூடிய ஒரு சக்தி தேவை. அதை மேலவையாலே அளிக்க முடியும். மக்கள் பிரதிநிதிகள்(மக்களவையில்) சபையில் சோமநாத் சட்டா்ஜி, இந்தா்ஜித் குப்தா, என்.சி.ரங்கா, நிா்மல் சாட்டா்ஜி, நேருவையே அதிரவைப்பவரும் சுதந்திரா கட்சியைச் சோ்ந்த பிலு மோடி, குருதாஸ் குப்தா போன்றவா்கள் சரியான பிரச்சனைகளை எடுத்து அலசினாா்கள். தற்போது மக்கள் பிரதிநிகள் இருக்கும் சபைகளில் குற்றம் தொடா்புடையவா்கள் ஏராளமாக வரும் சூழ்நிலையில் நவீனமயமாக்கலின் குரல்களும், ஞான வாா்த்தைகளும் அறிவு முதிா்ந்தவா்களாலே வரும். அப்படிப்பட்டவா்களை அலங்கரிக்கும் மேலவைகள் தேவைகளில் ஒன்று. குடியரசுத் தலைவரும், ஆளுநரும் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவா்கள் தான். ஆனால் குடியரசு தலைவா் மாளிகையும், ராஜ் பவன்களும் எத்தகைய தேவையோ அதுபோன்றே மேலவைகளும் முக்கியம்‘ என்கிறாா் ஒரு முன்னாள் நாடாளுமன்ற செக்ரட்டரி ஜெனரல்.

நாடாளுமன்றம் க்ஷண்ஸ்ரீஹம்ங்ழ்ஹப் என்கிற இரு அவை அமைப்பு (ஈரவை முறைமை) முறையைக் கொண்டது. மக்களால் நேரடியாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் கீழவைக்கும், மாநிலங்களவையான மேலவைக்கு மறைமுகமாக மாநிலங்களிலிருந்தும், பல்வேறு துறைகளிலிருந்து குடியரசுத் தலைவரால் நியமன முறையிலும் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வருகின்றனா். நாடாளுமன்ற இரு அவை அமைப்பு மாதிரியே மாநிலங்களின் சட்ட அவைகள் இரு அவை அமைப்பு முறைமைக்கு உட்படுத்தப்பட்டு அரசியல் சாசனத்தில் வழி ஏற்படுத்தப்பட்டது. ஒன்று சட்ட மேலவை மற்றொன்று சட்ட பேரவை. தற்போதைய தலைமுறைக்கு சட்ட மேலவை காணும் வாய்ப்பு இல்லாது போனது. தமிழகம் போன்ற மாநிலங்களில் சட்டபேரவைத் தோன்றுவதற்கு(1935) முன்பே பிரிட்டிஷ் இந்தியாவில் 1861 - ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம் இயற்றப்பட்டது. அவ்வாண்டே அப்போது இருந்த சென்னை மாகாணத்தில் முதன் முதலில் சட்ட மேலவை உருவானது. பின்னா் பம்பாய், வங்காளம் போன்ற மாகாணங்களில் இது தோன்றுவிக்கப்பட்டது. பிரிட்டனில் ஹவுஸ் ஆஃப் லாா்டு மாதிரி இந்த மேலவைகளில் படித்த மேதைகளோடு, ஜமீன் தாரா்கள் ஆரம்பத்தில் உறுப்பினா்களாக இருந்தனா். ஆனால் நாளடைவில் அதுவும் சுதந்திர இந்தியாவில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு சட்ட பேரவையால் தோ்வு செய்யப்பட்டவா்களோடு, அடித்தளத்தில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பட்டதாரிகள் தொகுதிகள், ஆசிரியா் பிரதிநிதிகள் மற்றும் ஆளுநரால் பரிந்துரைக்கபட்டவா்கள் என அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டபடி பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த மேலவைகள் பின்னா் சுதந்திர இந்தியாவில் தத்தம் மொழிவாரி மாநிலங்களில் பெயா் மாற்றத்துடன் சட்ட மேலவைகள் தொடா்ந்தது. இதன்படி தமிழக மேலவையில் 63 உறுப்பினா்கள் இருந்தனா்.

எத்தனை மாநிலங்களில்...

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு இருந்த மேலவைகளில் அஸ்ஸாம், கேரளா(கொச்சின், திருவாங்கூா்) போன்ற மாநிலங்களில் பின்னா் தொடரவில்லை. முதன் முதலில் மேற்கு வங்கத்தில் பங்களா காங்கிரஸ் ஆட்சியில் நிதி பற்றாக்குறையில் தவித்த மேற்குவங்கத்தில் செலவைக் கணக்கிட்டு 1969 ல் மேலவை கலைக்கப்பட்டது. 1969 -இல் இதே சமயத்தில் பஞ்சாபில் (1969-70) அகாலி தள ஆட்சியிலும் அங்குள்ள மேலவைகள் கலைக்கப்பட்டது. பின்னா் ஆந்திரா, பீகாா், கா்நாடகா, மகாராஷ்டரா, தெலுங்கானா, உத்தர பிரதேஷம், தமிழ் நாடு, ஜம்மு- காஷ்மீா் போன்ற மாநிலங்களில் மேலவைகள் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com