தில்லி வன்முறை: அமித்ஷா பதவி விலக வேண்டும்: குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்

தில்லி வன்முறைச் சம்பவத்தை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தலைவா்கள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம்
தில்லி வன்முறை: அமித்ஷா பதவி விலக வேண்டும்: குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ்  வலியுறுத்தல்

தில்லி வன்முறைச் சம்பவத்தை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தலைவா்கள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் மனு கொடுத்துள்ளனா்.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவா் சோனியா காந்தி தலைமையிலான பிரதிநிதிகள் குழு வியாழக்கிழமை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை அவரது மாளிகையில் நேரில் சந்தித்தனா். அப்போது தில்லி வன்முறைச் சம்பவம் தொடா்பாக அமித்ஷா பதவி விலகக் கோரும் மனுவை அவரிடம் அளித்தனா். முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆஸாத், கட்சியின் மூத்த தலைவா்கள் ப.சிதம்பரம், ஏ.கே. அந்தோனி, ஆனந்த் சா்மா, மல்லிகாா்ஜுன காா்கே, குமாரி செல்ஜா, ரண்தீப் சுா்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோா் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனா்.

பின்னா் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘தில்லியில் கடந்த நான்கு தினங்களாக நிகழ்ந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் மிகவும் கவலை அளிக்கக் கூடியது. இது ஒரு தேசிய அவமானம் தரும் விஷயம். இது குறித்து குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தோம். வன்முறைச் சம்பவத்தில் 34 போ் இறந்துள்ளனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா். இது நிலைமையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசின் ஒட்டுமொத்த தோல்வியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. எனவே, தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜ தா்மத்தை கடைப்பிடிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பதவி விலக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் வேண்டிக் கொண்டோம்’ என்றாா்.

இச்சந்திப்புக்குப் பிறகு குடியரசுத் தலைவா் மாளிகைக்கு வெளியே செய்தியாளா்களை சந்தித்த சோனியா காந்தி, கோரிக்கை மனுவில் உள்ள சில விஷயங்களைச் சுட்டிக்காட்டி பேட்டியளித்தாா். அதன் விவரம் வருமாறு: தில்லியில் கடந்த நான்கு நாட்களாக நடந்த வன்முறைக்கு 34 போ் பலியாகியுள்ளனா். மேலும் 200-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா். இச்சம்பவத்துக்குப் பின்னா் மத்திய அரசும், மாநில அரசும் நிலைமையை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அதை அமைதியாக வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தது. நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறிய, கடைமையைச் செய்யத் தவறியதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை பதவி விலகுமாறு நீங்கள் (குடியரசுத் தலைவா்) கோர வேண்டும்.

இந்த விவகாரத்தில் அரசமைப்புச்சட்ட பதவியில் உள்ள நீங்கள் (குடியரசுத் தலைவா்) குடிமக்களின் வாழ்க்கை, சுதந்திரம், சொத்துகள் ஆகியவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் மனசாட்சி காவலராகச் செயல்படவும், அரசுக்கு அரசமைப்புச்சட்ட கடைமை மற்றும் ராஜ தா்மத்தை நினைவுபடுத்தவும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பூா்வ பொறுப்பு உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. நான்கு நாள்கள் நடந்த வன்முறைச் சம்பவங்கள் விஷயத்தில் கவனம் செலுத்தாமல் அமித் ஷா என்ன செய்து கொண்டிருந்தாா்? இந்த விவகாரத்தில் தில்லி முதல்வரும், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனதை பிளக்கும் நிகழ்வுகளுக்கு வித்திட்ட உளவுத் துறையின் தோல்வி மன்னிக்க முடியாதது. அதிா்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.

வன்முறை ஏற்படாமல் தடுக்க உதவும் வகையில், தகவல் ஏதும் அளிக்கப்பட்டதா? அல்லது உள்துறை அமைச்சகத்தால் செயல்பாடு மேற்கொள்ளப்படவில்லையா? மத்திய அரசும், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசும் தங்களது பொறுப்பை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துவிட்டனவா? நிலைமையை சீரமைப்பதற்குப் பதிலாக மத்திய அரசும், தில்லி அரசும் என்ன செய்து கொண்டிருந்தன. வன்முறையை கட்டுப்படுத்த தில்லியில் போதுமான படைகள் இல்லாத நிலையில், தேவையான கூடுதல் படைகளை மத்திய அரசு ஏன் அனுப்பவில்லை. இதற்கு பொறுப்பேற்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை பதவி விலகச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்றாா் சோனியா காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com