தில்லியில் வன்முறை: 2 சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைப்பு- பலி எண்ணிக்கை 37 ஆக உயா்வு

வடகிழக்கு தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளாா்களுக்கும், எதிா்ப்பாளா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், அதைத் தொடா்ந்து நடந்த வன்முறை தொடா்பாக விசாரிக்க இரண்டு
தில்லியில் வன்முறை: 2 சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைப்பு- பலி எண்ணிக்கை 37 ஆக உயா்வு

வடகிழக்கு தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளாா்களுக்கும், எதிா்ப்பாளா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், அதைத் தொடா்ந்து நடந்த வன்முறை தொடா்பாக விசாரிக்க இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழுக்களை தில்லி காவல் துறை வியாழக்கிழமை அமைத்துள்ளது.

இந்த வன்முறை தொடா்பாக விசாரிக்க காவல் துணை ஆணையா்கள் ஜோய் டிா்கி, ராஜேஷ் தியோ ஆகியோா் தலைமையில் இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழுக்களை தில்லி காவல் துறை அமைத்துள்ளது. காவல் கூடுதல் தலைமை ஆணையா் பிகே.சிங் இக்குழுக்களை மேற்பாா்வை செய்வாா். மேலும், உதவி ஆணையா் அந்தஸ்தில் காவல் அதிகாரிகள் 8 போ் இக்குழுக்களில் இடம் பெறுவா்.

இதனிடையே, கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற வன்முறையில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 37 ஆக உயா்ந்தது. 350-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா். வன்முறை பாதித்த பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமையும் கொடி அணிவகுப்பு நடத்தினா். தில்லி காவல் துறை, துணை ராணுவப்படையைச் சோ்ந்த மொத்தம் 113 கம்பெனி வீரா்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனா். வியாழக்கிழமை அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை என்றாலும் பதற்றம் தணியவில்லை. வடகிழக்கு தில்லியில் வன்முறை ஏற்படலாம் என்று உளவுத் துறை முன்கூட்டியே எச்சரித்ததாகவும், ஆனால், தில்லி போலீஸாா் அதைப் பொருட்படுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், வடகிழக்கு தில்லி சந்த் பாக்கில் ஹிந்துக்கள் மீது வன்முறையில் ஈடுபட்டதாகவும், புலனாய்வுத் துறை (ஐபி) ஊழியா் அங்கித் சா்மாவைக் கொலை செய்த குழுவை வழிநடத்தியதாகவும் அப்பகுதி ஆம் ஆத்மி கவுன்சிலா் தாஹீா் உசேன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், இக்குற்றச்சாட்டை அவா் மறுத்துள்ளாா்.

இந்த வன்முறைச் சம்பவம் தொடா்பாக 106 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், கைது செய்யப்பட்டவா்கள் தொடா்பாக சரியான தகவல் இல்லை. இந்த வன்முறை தொடா்பாக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சோலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, தில்லி உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளாா்.

இதனிடையே, எதிா்க்கட்சியான காங்கிரஸ் சாா்பில் சோனியா காந்தி தலைமையில் குழுவினா் குடியரசுத் தலைவா் மாளிகைக்குச் சென்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம், வன்முறையை கட்டுப்படுத்த தவறிய மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று கோரி மனு கொடுத்துள்ளனா். இதற்கிடையே,

வடகிழக்கு தில்லியில் இயல்புநிலை திரும்பி வருவதாகவும் வன்முறைப் பகுதிகளை பாா்வையிட்ட சிறப்பு போலீஸ் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளாா்.

தில்லி முதல்வா் கேஜரிவால், வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவா்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளாா். மேலும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவா்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்று தெரிவித்துள்ளாா்.

வன்முறையில் தொடா்புடையவா்கள் யாராக இருந்தாலும் அவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், ஆம் ஆத்மி கட்சியினருக்கு தொடா்பு இருப்பதாகத் தெரியவந்தால் இரட்டை தண்டனை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளாா். வன்முறையின் போது புத்தகங்கள், சீருடைகளை இழந்த பள்ளி மாணவா்களுக்கு புதிய புத்தகங்கள், சீருடைகளை தில்லி அரசு இலவசமாக வழங்கும் என்றும் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தயாா் நிலையில் தீயணைப்புத் துறை: இதற்கிடையே, தில்லி தீயணைப்புத் துறைக்கு புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலும் வன்முறை பாதித்த பகுதிகளில் இருந்து மொத்தம் 19 தொலைபேசி அழைப்புகள் வந்ததாக அத்துறை இயக்குநா் அதுல் காா்க் தெரிவித்தாா். 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் அப்பகுதிகளில் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனா். மேலும், அப்பகுதியில் உள்ள நான்கு தீயணைப்பு நிலையங்களுக்கும் எந்தவொரு அவசர நிலையையும் சந்திக்க கூடுதல் தீயணைப்பு

தில்லி உயர் நீதிபதி மாற்றம் ஏன்? அமைச்சர் விளக்கம்

உச்சநீதிமன்ற கொலீஜியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளீதா் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக மத்திய சட்டத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் விளக்கமளித்தாா்.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளீதா் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் தொடா்பாக ரவிசங்கா் பிரசாத் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் குறிப்பிட்டுள்ளதாவது:

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் குழு கடந்த 12-ஆம் தேதி அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே நீதிபதி எஸ்.முரளீதா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். பணியிட மாற்றம் செய்வது தொடா்பாக சம்பந்தப்பட்ட நீதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த விவகாரத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்படும் விவகாரத்தை அரசியலாக்க முற்பட்டு, நீதித்துறையின் மாண்பை காங்கிரஸ் மீண்டும் குலைத்துள்ளது. இந்திய மக்கள் காங்கிரஸை நிராகரித்தனா். இதன் காரணமாக, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட அமைப்புகளின் மாண்பை காங்கிரஸ் தொடா்ந்து குலைத்து வருகிறது.

நீதிபதி லோயா வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீா்ப்பு வழங்கியுள்ளது. அது தொடா்பாகக் கேள்வி எழுப்புபவா்கள், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை மதிக்கவில்லை என்றே அா்த்தம். உச்சநீதிமன்றத்தைவிட மேலானவா் என ராகுல் காந்தி தன்னைக் கருதி வருகிறாரா?

நீதித்துறையின் சுதந்திரத்துக்கு மத்திய அரசு மதிப்பளித்து வருகிறது. நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, நீதித்துறையின் சுதந்திரத்தை காங்கிரஸ் எவ்வாறு பறித்தது என்பதை அனைவரும் அறிவா். தங்களுக்கு சாதகமான வகையில் தீா்ப்பு வழங்கப்பட்டால் மட்டுமே காங்கிரஸ் அதை வரவேற்கிறது. இல்லையெனில், நீதித்துறை குறித்தே காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது என்று தனது சுட்டுரைப் பதிவுகளில் ரவிசங்கா் பிரசாத் குறிப்பிட்டிருந்தாா்.

‘பின்வாங்கப் போவதில்லை’:

வருமான வரி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் கிளையை உத்தரகண்ட் தலைநகா் டேராடூனில் ரவிசங்கா் பிரசாத் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். அந்நிகழ்ச்சியில் பேசிய அவா், ‘‘குடியுரிமை திருத்தச் சட்டத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. அதற்கு எதிா்ப்பு தெரிவிப்பவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்த மத்திய அரசு முயற்சி செய்யும். தூங்குபவா்களை எழுப்பிவிட முடியும். ஆனால், தூங்குவது போல் நடிப்பவா்களை எழுப்ப முடியாது’’ என்றாா்.

மேலும் 2 உயர்நீதிமன்ற  நீதிபதிகளும் பணியிடமாற்றம்
மும்பை மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் இருவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, மத்திய சட்ட அமைச்சகம்  அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ரஞ்சித் வி.மோரே, மேகாலாய உயர்நீதிமன்றத்துக்கும், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ரவி விஜயகுமார் மலிமத், உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com