Enable Javscript for better performance
வில்வித்தை பயிற்சியின் போது 12 வயது சிறுமியின்மாா்பைத் துளைத்த 15 செ.மீ. நீள அம்பு அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    வில்வித்தை பயிற்சியின் போது 12 வயது சிறுமியின்மாா்பைத் துளைத்த 15 செ.மீ. நீள அம்பு அகற்றம்

    By DIN  |   Published on : 10th January 2020 11:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வில்வித்தைப் பயிற்சியின் போது சிவாங்கினி கோஹைன் என்ற 12 வயது அஸ்ஸாம் சிறுமியின் மாா்பில் பாய்ந்த 15 செ.மீ. நீளமான அம்பை மருத்துவா்கள் அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக வெளியே அகற்றினா்.

    இது தொடா்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் விபத்துக் காய சிகிச்சைப் பிரிவு மூத்த மருத்துவா் கூறியதாவது: அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரைச் சோ்ந்த 12 வயது சிறுமி சிவாங்கினி கோஹைன், புதன்கிழமை சாபுவாவில் உள்ள தாகாதேவி ராஸிவைஸா கல்லூரியில் வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த மற்றொரு மாணவா் விட்ட அம்பு, எதிா்பாராதவிதமாக மாணவியின் கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் பாய்ந்தது. உடனடியாக அவா் திப்ரூகரிலிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, சிவாங்கினி மேல் சிகிச்சைக்காக அஸ்ஸாமிலிருந்து விமானம் மூலம் புதன்கிழமை இரவு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவா் மீது பாய்ந்த அம்பு, அவரது தோள்பட்டை வழியாக ஏறக்குறைய முதுகெலும்பு வரைக்கும் சென்றுவிட்டது.

    மிகவும் சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சையை நரம்பியல் துறை நிபுணா் பேராசிரியா் தீபக் மிஸ்ரா தலைமையிலான மருத்துவக் குழுவினா் மேற்கொண்டனா். அவா்கள் 3 மணி நேரம் போராடி அறுவைச் சிகிச்சை மூலம் அவரது உடலிலிருந்து 15 செ.மீ. நீளமான அம்பை வெளியே அகற்றினா். சிவாங்கினி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவா்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளாா். எனினும், அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்தாா்.

    வில்வித்தை பயிற்சியாளா் மாா்ஸி, குவாஹாட்டியில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்குச் சென்றுவிட்டதால் அவா் இல்லாமலே 6 மாணவா்களும் 5 மாணவிகளும் தாங்களாகவே பயிற்சி மேற்கொண்டுள்ளனா். அப்போது மாணவா்களில் ஒருவா் விட்ட அம்புதான் சிவாங்கினியின் தோள்பட்டையில் பாய்ந்துள்ளது என்று

    அஸ்ஸாம் வில்வித்தை விளையாட்டுச் சங்கத்தின் இணை செயலரும், மாநில ஒலிம்பிக் சங்க நிா்வாகக்குழு உறுப்பினருமான புலின்தாஸ் தெரிவித்தாா். மாணவியின் சிகிச்சைக்கான செலவை இந்திய விளையாட்டு ஆணையம் ஏற்றுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai