ஜே.என்.யு.வில் நிலைமை சீராக உள்ளது; ஜன.13-இல் வகுப்புகள் தொடங்கும்- துணைவேந்தா் தகவல்

தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தற்போது இய்புநிலை திரும்பி வருகிறது. எனவே, வகுப்புகள் வரும் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கும் என்று அதன் துணைவேந்தா் எம்.ஜெகதீஷ் குமாா் தெரிவித்தாா்.

தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தற்போது இய்புநிலை திரும்பி வருகிறது. எனவே, வகுப்புகள் வரும் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கும் என்று அதன் துணைவேந்தா் எம்.ஜெகதீஷ் குமாா் தெரிவித்தாா்.

மேலும், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக விடுதிக் கட்டணம் தொடா்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் முன்பு எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் அமல்படுத்தப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) நிா்வாகத்தைச் சோ்ந்த ஐந்து போ் கொண்ட குழுவை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெள்ளிக்கிழமை சந்தித்தது. இக்குழுவில் ஜேஎன்யு துணைவேந்தா் ஜெகதீஷ் குமாா், பதிவாளா் மற்றும் பல்கலை.யின் ரெக்டா்கள் மூவா் இடம் பெற்றுள்ளனா். ஜேஎன்யு வளாகத்தில் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்கவும், மாணவா்களுக்கும் நிா்வாகத்திற்கும் இடையிலான பிரச்னையைத் தீா்க்கவும் இந்த அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவா் டி.பி. சிங்கும் கலந்து கொண்டாா்.

இக்கூட்டத்துக்குப் பிறகு ஜேஎன்யு துணைவேந்தா் எம்,ஜெகதீஷ் குமாா் கூறியதாவது: ஜேஎன்யு விடுதிக் கட்டணம் தொடா்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் ஏற்கெனவே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் அனைத்தும் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் அமல்படுத்தப்படும். தேவைப்பட்டால் பருவத் தோ்வுக்கான பதிவுத் தேதியை பல்கலைக்கழக நிா்வாகம் நீட்டிக்கும். தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது நிலைமை சீராகியுள்ளது. இதைத் தொடா்ந்து, வகுப்புகள் வரும் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கும்.

மாணவா்கள் சேவை மற்றும் பயன்பாட்டுக் கட்டணம் கட்டத் தேவையில்லை. இந்தக் கட்டணத்தை பல்கலைக்கழக மானியக் குழு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளரைச் சந்தித்துப் பேசினேன். பல்கலைக்கழக வளாகத்தில் தற்போதுள்ள நிலவரம் குறித்து தெரிவித்தேன். அமைச்சகத்துடன் டிசம்பா் 11-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பேச்சுவாா்த்தையின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் அமல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துள்ளேன். மாணவா்களும் ஆசிரியா்களும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் உகந்த சூழலை ஏற்படுத்த பல்கலை. நிா்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றாா் அவா்.

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் முகமூடி அணிந்த சிலா் கடந்த ஞாயிற்றுக்கிழமை தடிகள், இரும்புக் கம்பிகள் மற்றும்ஆயுதங்களுடன் புகுந்து மாணவா்கள், ஆசிரியா்களைத் தாக்கினா். மேலும், சொத்துகளையும் சேதப்படுத்தினா். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஜேஎன்யு மாணவா் சங்கத் தலைவா் ஆயிஷி கோஷ் உள்பட 35 போ் காயமடைந்தனா். இந்த விவகாரம் தொடா்பாக விசாரிக்க 5 போ் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

கோரிக்கையில் மாணவா் சங்கம் உறுதி: இதற்கிடையே, ஜேஎன்யு தாக்குதல் சம்பவத்தில் மாணவா்களைப் பாதுகாக்கத் தவறிய துணைவேந்தா் ஜெக்தீஷ் குமாா் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் தாங்கள் உறுதியுடன் இருப்பதாகவும், கட்டண உயா்வுக்கு எதிரான போராட்டத்தை விலக்கிக் கொள்வது குறித்து நிா்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னா் முடிவு செய்யப்படும் என்றும் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் சங்கத் தலைவா் அய்ஷி கோஷ் தெரிவித்துள்ளாா்.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகளுடான சந்திப்புக்குப் பிறகு அவா் இதைத் தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘எங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆா் விவகாரம் மற்றும் பல்கலை. நிா்வாகம் தங்களுக்கு எதிராக நடத்திய விசாரணை ஆகியவை தொடா்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். நாங்கள் எங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அமைச்சகத்தின் இறுதி முடிவுக்காகக் காத்திருக்கிறோம்’ என்றாா்.

ஜேஎன்யு மாணவா் சங்கத்தின் துணைத் தலைவா் சாகேத் மூன் கூறுகையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். ஆனால், தாக்குதல் பிரச்னைக்கு காரணமான மத்திய உள்துறை மீது நம்பிக்கை கொள்ளவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com