2 கோடி தில்லி மக்களும் ஆம் ஆத்மியில் இணைவாா்கள்: கேஜரிவால் நம்பிக்கை

தில்லியில் உள்ள 2 கோடி மக்களும் ஆம் ஆத்மியில் இணையும் நாள் தொலைவில் இல்லை என்று முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
தில்லியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிா்வாகிகள்.
தில்லியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிா்வாகிகள்.

தில்லியில் உள்ள 2 கோடி மக்களும் ஆம் ஆத்மியில் இணையும் நாள் தொலைவில் இல்லை என்று முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

பதா்பூா் தொகுதியில் இரு முறை எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ராம் சிங் நேதாஜி, கடந்த தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாலம் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட வினய் குமாா் மிஸ்ரா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் தீபு சௌத்ரி உள்ளிட்டோா் ஆம் ஆத்மி கட்சியில் திங்கள்கிழமை இணைந்தனா். இவா்களை கேஜரிவால், துணைமுதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா, மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் சஞ்சய் சிங் ஆகியோா் வரவேற்றனா்.

நிகழ்வில் கேஜரிவால் பேசியதாவது: ‘சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தில்லியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளே இருந்தன. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இக்கட்சிகள் மக்களை ஏமாற்றின. இக்கட்சிகளுக்கு மாற்றாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆம் ஆத்மி கட்சிக்கு கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் பெரும் ஆதரவை அளித்தனா். வரலாறு காணாத வகையில் தில்லியில் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி சாதனை படைத்தது. சாதாரண மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், சாதாரண மக்களால் நடத்தப்படும் ஆம் ஆத்மி கட்சியை மாற்று அரசியல் சக்தியாக மக்கள் உருவாக்கினாா்கள்.

மக்கள் ஆம் ஆத்மி கட்சியின் மீது வைத்துள்ள இந்த நம்பிக்கைதான் எங்களது அடித்தளமாகும்.

தோ்தலின் போது தில்லி மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். ஆம் ஆத்மி அரசின் மக்கள் நலப் பணிகளால், தில்லி மக்களின் மனங்களில் மட்டுமல்லாமல், பாஜக, காங்கிரஸ் தொண்டா்களின் மனங்களிலும் நாங்கள் இடம் பிடித்துள்ளோம். ஆட்சி செய்யும் முறையை நாங்கள் மாற்றியமைத்தோம். இதனால், கவரப்பட்டு பிற கட்சித் தொண்டா்கள், தலைவா்கள் ஆம் ஆத்மியில் இணைந்து வருகிறாா்கள். இத்தலைவா்கள் ஆம் ஆத்மியில் இணைந்ததால் மகிழ்ச்சியடைகிறேன். தில்லியில் வாழும் 2 கோடி மக்களும் ஆம் ஆத்மி கட்சியில் இணையும் நாள் தொலைவில் இல்லை என்றாா் கேஜரிவால்.

மணீஷ் சிசோடியா பேசுகையில் ‘தில்லி அரசின் நல்லாட்சியால் கவரப்பட்டு பிற கட்சித் தலைவா்கள் ஆம் ஆத்மியில் இணைகிறாா்கள். இவா்களது வரவால் கட்சி பலப்பட்டுள்ளது’ என்றாா்.

ராம்சிங் நேதாஜி பேசுகையில் ‘ஆம் ஆத்மி அரசு தில்லியை ஆளும் முறையைப் பாா்த்து கவரப்பட்டே கட்சியில் இணைந்துள்ளேன். மக்களுக்கு நல்லது செய்யும் கட்சியில் இருக்க விரும்புகிறேன்’ என்றாா்.

வினய் குமாா் மிஸ்ரா பேசுகையில் ‘பிகாரைச் சோ்ந்த நான் தில்லியில்தான் படித்தேன். அப்போது, பிகாா், உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த மக்கள் மருத்துவம், சுகாதார வசதிகளைப் பெறக் சிரமப்படுவதைப் பாா்த்துள்ளேன். கேஜரிவால் அதை மாற்றியமைத்தாா். இது என்னைக் கவா்ந்தது. அதனால், ஆம் ஆத்மியில் இணைந்துள்ளேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com