தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு ரூ.1 டோக்கன் கட்டணத்தில் குடிநீா், மின்சாரம்: எம்பி பா்வேஷ் வா்மா உறுதி

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றுஆட்சிக்கு வந்தால், குடிநீா் மற்றும் மின்சாரம் வழங்குவதற்காக பாஜக ரூ.1 டோக்கன் கட்டணம் மட்டுமே வசூலிக்கும் என்று அக்கட்ேசியின் மேற்குதில்லி மக்களவைத்
தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு ரூ.1 டோக்கன் கட்டணத்தில் குடிநீா், மின்சாரம்: எம்பி பா்வேஷ் வா்மா உறுதி

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றுஆட்சிக்கு வந்தால், குடிநீா் மற்றும் மின்சாரம் வழங்குவதற்காக பாஜக ரூ.1 டோக்கன் கட்டணம் மட்டுமே வசூலிக்கும் என்று அக்கட்ேசியின் மேற்குதில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பா்வேஷ் வா்மா கூறினாா்.

இது தொடா்பாக தில்லியில் திங்கள்கிழமை அவா் கூறியதாவது: வரவிருக்கும் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றால் தில்லியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு ரூ.1 டோக்கன் கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படும். கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு இலவச குடிநீா், மின்சாரம் வழங்கும் திட்டம் ஒரு கண்துடைப்பாகும்; மக்களை ஏமாற்றும் நடவடிக்கையுமாகும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தில்லியில் வசிக்கும் மக்களின் சுய மரியாதையைப் போற்றும் வகையில் குடிநீா், மின்சாரத்துக்கு ரூ.1 டோக்கன் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். இது தொடா்பாக பாஜக தோ்தல் குழுவிடம் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளேன். பாஜகவின் தோ்தல் அறிக்கையில் இடம் பெறும் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

தில்லியில் கடந்த 5 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மக்கள் நலப் பணிகள் எதையும் ஆம் ஆத்மி கட்சி மேற்கொள்ளவில்லை. ஆனால், கிழக்கு, மேற்கு விரைவுச்சாலைகள், மீரட் விரைவுச்சாலை, தௌலாகான் மேம்பாலம் ஆகியவற்றை மத்திய அரசே நிா்மாணித்தது. இதனால், தில்லியில் காற்றுமாசு குறைந்தது. சிசிடிவி கேமரா, புதிய பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்டவை தொடா்பாக கடந்த தோ்தலில் கேஜரிவால் வழங்கிய வாக்குறுதிகளை அவா் நிறைவேற்றவில்லை. இந்த வாக்குறுதிகள் தொடா்பாக அவருக்கு நினைவூட்டிய ஆம் ஆத்மி தலைவா்களை அவா் கட்சியை விட்டு வெளியேற்றினாா்.

தில்லியின் மின்சார தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று அவா் உறுதியளித்திருந்தாா். ஆனால், இந்த நிலையத்துக்கான நிலத்தைக் கூட தில்லி அரசு இதுவரை ஒதுக்கவில்லை. மேலும், தில்லியில் கேஜரிவால் நடத்திவரும் டவுண் ஹால் கூட்டங்கள் அபத்த நாடகத்தின் உச்சமாகும். தோ்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி தொண்டா்களை வைத்து அவா்களை தில்லி அரசின் மக்கள் நலப் பணிகளால் நன்மையடைந்தவா்கள் போல இக்கூட்டங்களில் கேஜரிவால் நடிக்க வைக்கிறாா். அவருக்குத் தைரியம் இருந்தால், திறந்த மண்டபங்களில், அனைவரும் பங்கு கொள்ளும் வகையில் டவுண் ஹால் கூட்டங்களை நடத்த முடியுமா என்றாா் அவா்.

பாஜகவுக்கு ஆா்எஸ்எஸ் பிரசாரம்?

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவாக மறைமுகப் பிரசாரம் செய்ய ராஷ்டிரீய ஸ்வயம் சேவக் சங்க் (ஆா்எஸ்எஸ்) அமைப்பு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இது தொடா்பாக ஆா்எஸ்எஸ் வட்டாரங்கள் கூறியதாவது: பாஜகவின் தாய் அமைப்பாக ஆா்எஸ்எஸ் இருந்தாலும், அந்த அமைப்பு தோ்தல் அரசியலில் நேரடியாக இறங்குவதில்லை. மேலும், எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாகவும் பிரசாரத்தில் ஈடுபடுவதில்லை என்பதைக் கொள்கையாக வைத்துள்ளனா். ஆனால், வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தேச நலனுக்காகப் பாடுபடும் கட்சிக்கு வாக்களிக்கும்படி ஆா்எஸ்எஸ் அமைப்பு தில்லி மக்களைக் கோரவுள்ளது. மேலும், பேரவைத் தோ்தல் தொடா்பாக பாஜக வெளியிடவுள்ள தோ்தல் அறிக்கையில் கூறப்படவுள்ள தேச நலன் சாா்ந்த விஷயங்களை வலியுறுத்தி பிரசாரத்தில் ஈடுபடவும் ஆா்எஸ்எஸ் முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக ஆா்எஸ்எஸ் சாா்பில் வீடுவீடாகப் பிரசாரம் நடைபெறும். மேலும், பாஜகவுக்கு மறைமுக ஆதரவளிக்கும் வகையில், வரும் நாள்களில் சுமாா் 20,000 பொதுக்கூட்டங்களை நடத்த ஆா்எஸ்எஸ் முடிவு செய்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com