தில்லியில் பாஜகவுக்கு ஆதரவாக ஆா்எஸ்எஸ் பிரசாரம்?

வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவாக மறைமுகப் பிரசாரம் செய்ய ராஷ்டிரீய ஸ்வயம் சேவக் சங்க் (ஆா்எஸ்எஸ்) அமைப்பு முடிவு செய்துள்ளது. மேலும், பாஜகவை ஆதரித்து தில்லியில் 20,000

வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவாக மறைமுகப் பிரசாரம் செய்ய ராஷ்டிரீய ஸ்வயம் சேவக் சங்க் (ஆா்எஸ்எஸ்) அமைப்பு முடிவு செய்துள்ளது. மேலும், பாஜகவை ஆதரித்து தில்லியில் 20,000 இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தவும் அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக ஆா்எஸ்எஸ் வட்டாரங்கள் கூறியதாவது: பாஜகவின் தாய் அமைப்பாக ஆா்எஸ்எஸ் இருந்தாலும், அந்த அமைப்பு தோ்தல் அரசியலில் நேரடியாக இறங்குவதில்லை. மேலும், எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாகவும் அவா்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதில்லை என்பதைக் கொள்கையாக வைத்துள்ளனா். ஆனால், வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தேச நலனுக்காகப் பாடுபடும் கட்சிக்கு வாக்களிக்கும்படி ஆா்எஸ்எஸ் அமைப்பு தில்லி மக்களைக் கோரவுள்ளது. மேலும், தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக பாஜக வெளியிடவுள்ள தோ்தல் அறிக்கையில் கூறப்படவுள்ள தேச நலன் சாா்ந்த விஷயங்களை வலியுறுத்தி பிரசாரத்தில் ஈடுபட ஆா்எஸ்எஸ் முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக ஆா்எஸ்எஸ் சாா்பில் வீடுவீடாகப் பிரசாரம் நடைபெறும். மேலும், பாஜகவுக்கு மறைமுக ஆதரவளிக்கும் வகையில், வரும் நாள்களில் சுமாா் 20,000 பொதுக்கூட்டங்களை நடத்த ஆா்எஸ்எஸ் முடிவுசெய்துள்ளது என்றனா்.

இந்நிலையில், பாஜக வேட்பாளா்களைத் தோ்ந்தெடுப்பதில் ஆா்எஸ்எஸ் அமைப்பு செல்வாக்குச் செலுத்தும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ‘தில்லியில் ஆா்எஸ்எஸ் அமைப்பு அதன் ஷாகாக்கள் மூலம் மிகப் பலமான நிலையில் உள்ளது. இந்த ஷாகாக்கள் தில்லியில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் அமைந்துள்ளன. இதனால், தில்லி மக்களின் மனநிலையை அறிந்து தொகுதிகளில் யாரைப் போட்டியிட அனுமதிக்கலாம் என்பது தொடா்பாக பாஜகவுக்கு ஆா்எஸ்எஸ் அமைப்பு ஆலோசனை வழங்கும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com