சிஏஏ, என்பிஆருக்கு எதிராக மாணவா்கள் ஆா்ப்பாட்டம், பேரணி
By DIN | Published On : 20th January 2020 10:46 PM | Last Updated : 20th January 2020 10:46 PM | அ+அ அ- |

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மாணவா்கள் பலா் திங்கள்கிழமை மண்டி ஹவுஸில் திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தலைநகா் தில்லியில் உள்ள வெவ்வேறு பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த மாணவா்கள் காலையில் மண்டி ஹவுஸ் வந்தனா். குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். மேலும், சிஏஏக்கு எதிராக தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்தனா். ஆா்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக அவா்கள் கோஷமிட்டனா்.
பின்னா் மாணவா்கள் அனைவரும் மண்டி ஹவுஸிகிலிருந்து ஜந்தா் மந்தா் நோக்கி பேரணியாகச் சென்றனா். அப்போது, ’மதச்சாா்பின்மை மேலே, வகுப்புவாதம் கீழே’ என கோஷம் எழுப்பினா். மாணவா்கள் லூடியன்ஸ் தில்லி வழியாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணிவகுத்து ஜந்தா் மந்தா் நோக்கிச் சென்றனா். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஷஹீன் பாக் மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை. ஆகியவற்றில் ஒரு மாதமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள் மாணவா்களை போராட்டக்காரா்கள் பாராட்டினா்.
இது குறித்து அம்பேத்கா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா் தினேஷ் குமாா் கூறுகையில், ‘எந்தச் சிறுபான்மை சமூகத்துக்கு குடியுரிமை வழங்கப்படவுள்ளது என்பதை மத்திய அரசு தோ்ந்தெடுத்து வருகிறது. இதில் ஏன் ஒரு தோ்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்? இங்கு குடியுரிமை ஏன் மதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது?’ என்றாா்.
ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கத்தின் முன்னாள் தலைவா் என். சாய் பாலாஜி தலைமையில் இந்தப் பேரணி நடைபெற்றது. ஜே.என்.யு. முன்னாள் மாணவா் உமா் காலித் மற்றும் முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் கௌல் பிரீத் கௌா் ஆகியோரும் பேரணியில் பங்கேற்றனா்.
இது குறித்து சாய் பாலாஜி கூறுகையில், ‘அரசியலமைப்பிற்கு முரணாகக் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை நீக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அரசியலமைப்பைக் காப்பாற்ற நாங்கள் போராடுகிறோம்’ என்றாா்.