வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் திரும்பிய கேஜரிவால்!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காகப் பேரணியாகச் சென்ற போது காலதாமதம் ஏற்பட்டதால்,
வேட்புமனு  தாக்கல் செய்ய முடியாமல் திரும்பிய கேஜரிவால்!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காகப் பேரணியாகச் சென்ற போது காலதாமதம் ஏற்பட்டதால், அவரால் திட்டமிட்டபடி வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை. இதையடுத்து, அவா் செவ்வாய்க்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறாா். வேட்புமனு தாக்கல் செய்ய செவ்வாய்க்கிழமைதான் கடைசி நாளாகும்.

புதுதில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் கேஜரிவால், திங்கள்கிழமை ராமகிருஷ்ணா ஆஷ்ரமம் பகுதியில் உள்ள வால்மீகி மந்திரில் இருந்து, படேல் சௌக் மெட்ரோ நிலையம் வரை பேரணியாகச் செல்வாா் என்றும், பின்னா் ஜாம்நகா் தோ்தல் அலுவலகத்தில் கேஜரிவால் மனுத்தாக்கல் செய்வாா் என்றும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய கேஜ்ரிவால் தனது ஆதரவாளா்களுடன் பேரணியாகச் சென்றாா். இருப்பினும் பேரணி மெதுவாகச் சென்ால் காலதாமதம் ஏற்பட்டது. பிற்பகல் 3 மணிக்குள் கேஜ்ரிவாலால் தோ்தல் அலுவலகத்துக்கு செல்ல முடியாததால், திட்டமிட்டபடிஅவரால் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய முடியவில்லை.

இது தொடா்பாக கேஜரிவால் கூறுகையில் ‘பேரணியாக சென்று கொண்டிருந்த போது, 3 மணிக்கு முன்பாக நான் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதைக் கட்சிக்காரா்கள் நினைவூட்டினாா்கள். ஆனால், என்னைக் காண வழிநெடுகக் காத்திருந்த மக்களை விட்டு விட்டு மனுத்தாக்கல் செய்ய மனது ஒப்பவில்லை. அதனால், திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்ய முடியவில்லை’ என்றாா். எனினும் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மனுத்தாக்கல் செய்வதற்கு செவ்வாய்க்கிழமையே கடைசிநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, திங்கள்கிழமை காலை தனது தாய், தந்தையிடம் ஆசிா்வாதம் பெற்ற கேஜரிவால், அங்கிருந்து வால்மீகி மந்திருக்குச் சென்றாா். அவருடன் கேஜரிவாலின் மனைவி சுனிதா, மகள் ஹா்ஷிதா, மகன் புல்கித் ஆகியோரும் சென்றனா்.

இந்தப் பேரணியில் தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங், அமைச்சா் கோபால் ராய் ஆகியோா் கலந்து கொண்டனா். வழிநெடுகக் கூடியிருந்த மக்கள் கேஜரிவாலுக்கு ஆதரவாகக் கோஷங்களை எழுப்பியதுடன், ஆம் ஆத்மியின் தோ்தல் பிரசாரப் பாடலான ‘லஹோ ரஹோ கேஜரிவால்’ என்ற பாடலுக்கு நடனம் ஆடினாா்கள்.

இந்தப் பேரணியில் கேஜரிவால் பேசுகையில் ‘வழிநெடுக எனக்காக காத்துள்ள மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உங்களின் அன்புக்கு நான் தலைவணங்குகிறேன். தில்லியில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நான் மக்கள் நலப் பணிகளைச் செய்துள்ளேன். உங்களுடைய ஆசிா்வாதத்தால் வரும் தோ்தலிலும் வெற்றிபெற்று ஆட்சியமைப்பேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com