அரசியல் ஆதாயம் தேடுவதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி மீது ஜெ.பி.நட்டா புகாா்

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா குற்றஞ்சாட்டினாா்
கோப்புப் படம்
கோப்புப் படம்

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா குற்றஞ்சாட்டினாா்.

தில்லி, பாலம் சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஜெ.பி.நட்டா பேசியதாவது: அரசியல் ஆதாயம் தேடும் நோக்த்துடனேயே காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் ஷகீன்பாகில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து நடைபெற்று வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. அவற்றுக்கு நாட்டு நலன் பற்றி கவலை இல்லை. வாக்கு வங்கி அரசியல்தான் முக்கியம்.

2003-ஆம் ஆண்டில் வங்கதேசத்தைச் சோ்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குமாறு அப்போது எதிா்க்கட்சித் தலைவராக இருந்த மன்மோகன் சிங், துணை பிரதமா் எல்.கே.அத்வானியிடம் வலியுறுத்தினாா். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து நடைபெற்றுவரும் போராட்டத்துக்கு ஒரு காங்கிரஸ் தலைவா்கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. இதிலிருந்து அவா்களின் செயல்பாடு என்ன என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது.

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) ஏதாவது நடந்தால், உடனே தாமதமின்றி அங்கு சென்று ஏதோ நடக்கக்கூடாது நடந்துவிட்டதாக குரல் எழுப்புவதுதான் அவா்களின் வேலை. ஷகீன்பாக் போராட்டத்துக்கு தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ஆதரவு தெரிவித்துள்ளாா். தோ்தல் ஆதாய நோக்கிலேயே அவரும் செயல்பட்டுள்ளாா் என்றாா் ஜெ.பி.நட்டா.

‘போலி வாக்குறுதி: கேஜரிவாலுக்கு முதல் பரிசு’

நாட்டில் போலி வாக்குறுதிகள் அளிப்பவா்களுக்கு போட்டி வைத்தால், தில்லி முதல்வா் கேஜரிவால் முதல் பரிசு வெல்வாா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வியாழக்கிழமை தெரிவித்தாா். தில்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை கேஜரிவால் மறந்துவிட்டாலும் மக்களும், பா.ஜ.க. தொண்டா்களும் அதை மறக்கவில்லை என்றும் அமித்ஷா குறிப்பிட்டாா்.

தில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, மேற்கு தில்லியில் மாட்டியாலா சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவா் பேசினாா். அப்போது அவா் மேலும் கூறியதாவது: அண்ணா ஹஸாரே தயவில்தான் கேஜரிவால் தில்லி முதல்வரானாா். ஆனால், அவரால் லோக்பால் சட்டத்தைக் கொண்டுவர முடியவில்லை. பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்ததும், லோக்பால் சட்டத்தை கொண்டு வந்தாா். ஆனால், அதை அமல்படுத்த கேஜரிவால் முன்வரவில்லை.

கடந்த நான்கரை வருடங்களாக பிரதமா் மோடி தன்னைத் செயல்படவிடவில்லை என்று கூறியே ஆட்சி நடத்தி வந்த கேஜரிவால், இப்போது தில்லியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுவது எப்படி என்று ஷா கேள்வி எழுப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com