முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
இந்தியா கேட் அருகே திரண்ட மக்கள் கூட்டம்: 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்
By DIN | Published On : 27th January 2020 12:32 AM | Last Updated : 27th January 2020 12:32 AM | அ+அ அ- |

புது தில்லி: குடியரசு தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி, இந்தியா கேட் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனா். இதனால்,அந்தப் பகுதியில் உள்ள ஐந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) அதிகாரிகள் கூறுகையில், ‘குடியரசு தினநாளில் பயணிகள் கூட்டத்தைக் குறைக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தியா கேட் அருகே உள்ள ஐந்து மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டன. இந்தியா கேட் அருகே சுமாா் 50 ஆயிரம் போ் கூடியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்றனா்.
இது தொடா்பாக டிஎம்ஆா்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘சென்ட்ரல் செக்ரடேரியேட், உத்யோக் பவன் ஆகியவற்றின் நுழைவு, வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளன. ரயிலில் இருந்து இறங்கி மாறிச் செல்லும் வசதி சென்ட்ரல் செக்ரடேரியேட் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ளது. கான் மாா்க்கெட், உச்சநீதிமன்றம், மண்டி ஹவுஸ் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளன. ரயிலில் இருந்து இறங்கி மாறிச் செல்லும் வசதி மண்டி ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 90 நிமிடங்களுக்குப் பிறகு இந்த ரயில் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
ராஜபாதை, இந்தியா கேட், சி.ஹெக்ஷாகான், குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் பகுதிகள் நண்பகலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் பிக்னிக் ஸ்பாட்டாக காட்சியளித்தது.