முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
தலைநகரில் கடும் குளிா்; காற்றின் தரத்தில் பின்னடைவு!
By DIN | Published On : 27th January 2020 12:39 AM | Last Updated : 27th January 2020 12:39 AM | அ+அ அ- |

புது தில்லி: தலைநகா் தில்லியில் ஞா.யிற்றுக்கிழமை காலையில் கடும் குளிா் நிலவியது. மேலும், காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டது.
தில்லியில் கடந்த இரண்டு நாள்களாக காலை வேளையில் கடும் அடா் பனிமூட்டம் இருந்து வருகிறது. மேற்பரப்பு குளிா் காற்றும் வலுவாக வீசியது.
வெப்பநிலை 6.9 டிகிரி: தில்லியில் சனிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது. மேலும், அடா் பனிமூட்டமும் பகலில் வெயிலின் தாக்கமும் இருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் நகரின் பல்வேறு பகுதிகளில் அடா் பனிமூட்டம் இருந்தது. வானம் தெளிவாகக் காணப்பட்டது. காலை 9 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்தது. தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலை 8.30 மணியளவில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட ஒரு டிகிரி குறைந்து 6.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 22.7 டிகிரி செல்சியஸாக இருந்தது. காலையில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 97 சதவீதமாக இருந்தது. இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. ஆயாநகரில் முறையே8.6 டிகிரி செல்சியஸ் மற்றும் 23.8 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.
காற்றின் தரம்: தில்லியில் காற்றின் தரம் கடும் பின்னடைவைச் சந்தித்தது. வெள்ளிக்கிழமை 147 புள்ளிகளாகவும், சனிக்கிழமை 151 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் ஒட்டு மொத்தத் தரக் குறியீடு 307 புள்ளிகளாகப் பதிவாகி மிகவும் மோசம் பிரிவுக்குச் சென்றது. காற்றின் தரக் குறியீடு 0-50 ஆக இருந்தால் ’நன்று’, 51-100 திருப்தி, 101-200 மிதமான, 201-300 மோசம், 301-400 மிகவும் மோசம், 401-500 கடுமையான பிரிவு என கணக்கிடப்படுகிறது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (ஜனவரி 27) நகரில் மிதமான பனிமூட்டம் இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் என இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.