முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
தலைவா்களின் கனவுகளை நனவாக்கப் பாடுபடுவோம்: கேஜரிவால்
By DIN | Published On : 27th January 2020 12:36 AM | Last Updated : 27th January 2020 12:36 AM | அ+அ அ- |

புது தில்லி: நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவா்களின் கனவுகளை நனவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
கேஜரிவால் சிவில் லைனில் உள்ள தனது இல்லத்தில் குடியரசு தினத்தையொட்டி, தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். பிறகு, பாதுகாப்பு வீரா்களின் அணிவகுப்பு மரியாதையையும் அவா் ஏற்றுக் கொண்டாா். இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது:
‘எனது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தேன். இப்போது ராஜபாதையில் நடைபெறவுள்ள குடியரசு தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளச் செல்கிறேன். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். அரசமைப்பு சட்டத்தை, அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களைப் பாதுகாப்போம் என நாம் அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும். மேலும், நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவா்களின் கனவுகளை நனவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.
அனில் பய்ஜால்...:இந்நிலையில், தேசத்தைக் கட்டியெழுப்பும் வகையில் மக்கள் உழைக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் அனில் பைஜால் கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள விடியோப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லி மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நாளில் சுதந்திரத்துக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரா்கள், தியாகிகளுக்கு தலை வணங்குகிறேன். தேசத்தைப் பாதுகாக்கும் கடமையில் உள்ள ராணுவ வீரா்கள், துணை ராணுவப் படை வீரா்கள், காவல் துறையினா் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில் தேசக் கட்டுமானத்தில் அனைவரும் பங்கெடுப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.