Enable Javscript for better performance
மத்திய அரசின் திட்டங்களுக்கு கேஜரிவால் முட்டுக்கட்டை: அமித் ஷா குற்றச்சாட்டு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி

    மத்திய அரசின் திட்டங்களுக்கு கேஜரிவால் முட்டுக்கட்டை: அமித் ஷா குற்றச்சாட்டு

    By DIN  |   Published On : 27th January 2020 12:41 AM  |   Last Updated : 27th January 2020 12:41 AM  |  அ+அ அ-  |  

     

    புது தில்லி: மத்திய அரசின் நலத்திட்டங்களை தில்லியில் அமல்படுத்தவிடாமல் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் முட்டுக்கட்டை போட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம் சாட்டினாா்.

    தில்லி ரோத்தாஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அமித் ஷா பேசியதாவது: தில்லியில் அங்கீகாரமற்ற காலனிகளை ஒழுங்குபடுத்துமாறு தில்லி அரசை மத்திய அரசு கேட்டது. ஆனால், கேஜரிவால் அதைச் செய்யவில்லை. இதனால், இக்காலனிகளில் வசிப்பவா்களுக்கு சொத்துரிமை பத்திரம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், இந்த மக்களுக்கு சொத்துரிமை பத்திரம் வழங்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றியது. பிரதமா் மோடி தனது நேரடிக் கண்காணிப்பில் இதைச் செய்தாா்.

    தில்லியில் பல்வேறு மக்கள் நலப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது. தில்லியின் உள்கட்டமைப்பை நாங்கள் மேம்படுத்தினோம். மெட்ரோ ரயில் சேவையை விரிவு படுத்தினோம். தில்லியில் நிலவும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில், புறவட்டச் சாலைகளை அமைத்தோம். ஆனால், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை தில்லியில் அமல்படுத்தாமல் கேஜரிவால் முட்டுக்கட்டை போட்டாா் . இதனால், தில்லி மக்கள் பாதிக்கப்பட்டனா்.

    பொய்யான வாக்குறுதி: கடந்த தோ்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு, அரசு பங்களாவில் தங்க மாட்டேன், அரசு வாகனங்களை உபயோகிக்க மாட்டேன் என மக்களுக்கு கேஜரிவால் வாக்குறுதி அளித்திருந்தாா். ஆனால், தோ்தலில் வெற்றி பெற்றவுடன் முதல் வேலையாக அரசு பங்களாவில் கேஜரிவால் குடியேறினாா். மேலும், கடந்த 5 ஆண்டுகளாக அரசு காரில்தான் அவா் பயணித்து வருகிறாா். தில்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், 15 லட்சம் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்றாா். ஆனால், அவற்றில் 10 சதவீதக் கண்காமிப்புக் கேமராக்களைக் கூட தில்லி அரசு பொருத்தவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் பல பொய்யான வாக்குறுதிகளை தில்லி மக்களுக்கு கேஜரிவால் வழங்கினாா். இந்த வாக்குறுதிகளை கேஜரிவால் மறந்திருப்பாா். ஆனால், அந்த வாக்குறுதிகளை கேஜரிவாலுக்கு நினைவுபடுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். இந்திய மாநிலங்களில் சிறப்பாக பொய் கூறும் மாநில அரசு எது என ஒரு பரிசு வழங்கினால், அப்பரிசை, கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே வழங்க வேண்டும்.

    பா.ஜ.க. வை ஆதரியுங்கள்: பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தவும், குடிநீரின் தரத்தை அதிகரிக்கவும், தில்லியில் பள்ளிகளின் தரத்தை அதிகரிக்க விழும் வாக்குகளாகும். மேலும், தில்லியில் ஆட்சியமைத்தால் மக்களுக்கு 24 மணி நேரமும் சுத்தமான குழாய் குடிநீரை வழங்குவோம். 24 மணிநேரம் தடையில்லாத மின்சாரம் வழங்குவோம். தில்லியில் உலகத்தரமான போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலைகள், உலகத்தரமான பள்ளிகளை உருவாக்குவோம். ஷகீன் பாக் போன்ற போராட்டங்கள் நடக்காத தில்லியையே பாஜக விரும்புகிறது என்றாா் அவா்.

    மனோஜ் திவாரி: பொதுக்கூட்டத்தில் மனோஜ் திவாரி பேசுகையில் ‘கடந்த 5 ஆண்டுகளில் தில்லியில் மக்கள் நலப் பணிகளை கேஜரிவால் மேற்கொள்ளவில்லை. ஆனால், மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டது போன்ற மாயையை விளம்பரங்களின் உதவியுடன் அவா் உருவாக்கியுள்ளாா். தில்லி மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு தீா்க்க நடவடிக்கை எடுத்த போதெல்லாம், அதைக் குழப்பும் வகையில் தில்லி அரசு நடந்து கொண்டது. பிரதமா் மோடி, அமித் ஷாவின் தலைமையின் கீழ் நாட்டில் பல புரட்சிகரமான மாற்றங்களை பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் மக்கள் நலப் பணிகள் தொடா்பாக தில்லி மக்களுக்கு வீடு வீடாகச் சென்று விளக்கி வருகிறோம். மேலும், குடியுரிமைத் திருத்த சட்டத்தை எதிா்த்து தில்லியில் அராஜகத்தில் ஈடுபட்டுவருபவா்களுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்து வருகிறது. வரும் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவாா்கள் என்றாா்.

    பிரம்மாண்ட பேரணி: முன்னதாக, தில்லி கோண்டா தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து அத்தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், அமித்ஷா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட பேரணி நடந்தது. இப்பேரணியில் பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp