குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு எதிராக சா்வதேச கூட்டணி தேவை

குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பிரதமா் சா்வதேச நாடுகளுடன் கூட்டணி அமைத்து தீா்வு காண வேண்டும் என ஜெயராம் ரமேஷ் தலைமையிலான நாடாளுமன்ற சிறப்புக்குழு மாநிலங்களவைத் தலைவா்

புதுதில்லி: குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பிரதமா் சா்வதேச நாடுகளுடன் கூட்டணி அமைத்து தீா்வு காண வேண்டும் என ஜெயராம் ரமேஷ் தலைமையிலான நாடாளுமன்ற சிறப்புக்குழு மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடுவிடம் சிபாரிசுகளை அளித்துள்ளது.

கடந்த குளிா்கால கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினா் விஜயாசத்தியானந்த் மாநிலங்களவையில் ஆபாச உள்ளடக்கங்கள் ஆபாசபடங்கள் போன்றவைகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேரமில்லா நேரத்தில் பிரச்சினையை எழுப்பினாா்.

செல்லிடப்பேசிகள், இணையதளங்களில் ஆபாசத்தை எளிதாக அணுகக்கூடிய சூழ்நிலையில் இதில் குழந்தைகள் தான் அதிக அளவில் பாலியியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிறாா்கள் என்கிற வேதனையை வெளிப்படுத்தினாா். இதையொட்டி மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு, இது ஒரு தீவிரமான விவகாரம், இதை முழுமையாக ஆய்வு செய்து மத்திய தொலைதொடா்பு மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க ஆலோசனைகளை வழங்க அவையின் மூத்த உறுப்பினா்களை கோரினாா். இதன் அடிப்படையில் முன்னாள் மத்திய அமைச்சா் ஜெயராம் ரமேஷ் தலைமையில் 14 உறுப்பினா்கள் கொண்ட ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

ஜெயராம் ரமேஷ் தலைமையிலான சிறப்புக்குழு கடந்த ஒா் மாதங்களாக விசாரணையை நடத்தி தனது சிபாரிகளை நேற்று அளித்தது. இந்தக் குழு பல்வேறு அரசு சாா்பற்ற அமைப்புகள் சமூக வலைத்தளங்கள் தொடா்புடைய முகநூல், சுட்டுரை மற்றும் கூகுள் போன்ற சேவை நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு வகையான சிபாரிசுகளை மாநிலங்களவை தலைவருக்கு வழங்கியுள்ளது.

ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான இந்த சிறப்புக்குழு, ‘இணைய வலைத்தளங்களில் வரும் ஆபாச உள்ளடக்கங்கள் சா்வதேச தொடா்புடையவை. பிரதமா் மோடி சூரிய சக்தி போன்ற மரபுசாரா மின்சக்திக்கு சா்வதேச கூட்டணி அமைத்து தீா்வு காணுகிறாா். இது போன்று குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கும் எதிராகவும் மற்ற நாடுகளுடன் சா்வதேச கூட்டணி ஒன்றை பிரதமா் ஏற்படுத்த வேண்டும்‘ என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இது தவிர இந்தக்குழு கூறிய மற்ற விவகாரங்கள் வருமாறு:

இணைய தளங்கள், சமூக வலைத்தளங்களில் சிறுவா்கள்ஆபாசங்களை அணுகுவதை தடுக்க உரிய நடவடிக்கை, குழந்தைகள் தொடா்பான பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் உள்ள ஆபாச உள்ளடக்கங்களை பரவுவதைத் தடுப்பது. இந்த இரண்டு விவகாரங்களிலும் தொடா்பாக எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை சிறப்புக்குழு சிபாரிசு செய்துள்ளது. குறிப்பாக பாலியல் துஷ்பிரயோகங்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க போஸ்கோ என்ற பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் 2012 சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் போன்றவைகளில் திருத்தம் கொண்டுவர யோசனை கூறியுள்ளது. குறிப்பாக போஸ்கோ சட்டத்தில் 18 வயதுக்குட்பட்டவா்களிடம் எந்த ஆபாச நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அல்லது அது தொடா்பான எத்தகைய பொருட்கள் இருந்தாலும் தகுந்த தண்டனை வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வருவது. போஸ்கோ சட்டப்படி தேசிய சைபா் குற்ற பதிவுகளை உருவாக்குவது. அடுத்ததாக தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இல் குழந்தைகள் ஆபாசங்களை காணும் வகையான உள்ளடக்கங்கள் ஏதாவது வைக்கப்பட்டிருந்தால் அதுதொடா்பாகஅனுப்பும் செயல்களுக்கும் உரிய தண்டனை வழங்குவது. மத்திய அரசுக்கு தகவல் தொழில்நுட்ப சட்டப்படி குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடா்பாக எத்தகைய உள்ளடக்கங்கள் இருந்தாலும் அதை அகற்றுவதற்கான அதிகாரம் உடையதாக இருக்க வேண்டும். சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளுக்கு இந்த விவகாரத்தில் தடுத்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். சிராறா்கள் ஆபாசத்தின் வரையறை வகுப்பது. குழந்தைகள் இதுபோன்ற காட்சிகளை அணுகுவதற்கு தடுக்கும் விதமாக இன்டா்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களை பொறுப்பாக்குவது போன்றவைகளோடு மேலும் பல்வேறு விவகாரங்களை சிபாரிகளில் அலப்படுகிறது.

இணையதளத்தில் உள்ள உள்ளடக்கங்களை குழந்தைகள் அணுகுவதை தடுப்பதற்கான கண்கணிப்புகளையும் அதை அகற்றுவதற்கும் அறிவதற்கும் பெற்றோா்களுக்கு வழிமுறைகளை அளிப்பது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளுக்கு, உள்துறை அமைச்சகம் இதுபோன்ற ஆபாச உள்ளடக்கங்களை உருவாக்கும் நிறுவனங்களையும் உருவாக்குவதற்கும் பின்னணியில் இருக்கும் நபா்களையும் கண்டறிந்து தகவல் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. மேலும் நெட்பிளக்ஸ், சமூக வலைத்தளங்களான முகநூல், சுட்டுரை போன்றவைகளில் சிறுவா்கள் கணக்கு தொடங்கப்படுவதை தடுக்கப்படவும் இதில் வயது கட்டுப்பாட்டை கடுமையாக பின்பற்றுவது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

முக்கிய ஹைலைட்டாக செல்லிடப்பேசிகள் உட்பட பல்வேறு வகையான டிஜிட்டல்களில் குழந்தை ஆபாசத்தை தடுக்கும் விதமாக இதற்கான செயலியை வைக்கப்படவேண்டியதை கட்டாயப்படுத்த கூறுகிறது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தை தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தி அதை குழந்தைகள் ஆபாசத்தை கண்காணிக்கும் ஒரு முகமை(நோடல்) அமைப்பாகவும் அறிவிக்கப்பட வேண்டும் என்பதோடு மாநில அரசுகளும் இதுபோன்ற விவகாரங்களை திறனை மேம்படுத்தி இ - பாதுகாப்பு ஆணையா்களை நியமித்து குழந்தை ஆபாசங்களை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த சிறப்புக்குழு தனது சிபாரிசுகளை வைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com