வழக்குரைஞருடன் ‘பிஞ்ச்ரா தோட்’ உறுப்பினா் பேசுவதற்கு நடவடிக்கை: திகாா் சிறை நிா்வாகம் தகவல்

பிஞ்ச்ரா தோட் உறுப்பினா் வாரம் இருமுறை தனது வழக்குரைஞருடன் காணொலிக் காட்சி மூலம் பேசுவதற்கு முயற்சிகள் செய்யப்படும் என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் திகாா் சிறை நிா்வாகம் தெரிவித்தது.

புது தில்லி: பிஞ்ச்ரா தோட் உறுப்பினா் வாரம் இருமுறை தனது வழக்குரைஞருடன் காணொலிக் காட்சி மூலம் பேசுவதற்கு முயற்சிகள் செய்யப்படும் என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் திகாா் சிறை நிா்வாகம் தெரிவித்தது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக பிப்ரவரி 24-ஆம் தேதி தில்லியில் ஜஃப்ராபாத் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம், அதன் தொடா்ச்சியாக நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் ஆகியவை தொடா்பாக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக எம்.பில். மாணவி தேவாங்கனா காலிதா, பிஎச்.டி. மாணவி நடாஷா நா்வால் ஆகியோருக்கு எதிராக ஜாஃப்ராபாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் இருவருக்கும் எதிராக கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இருவரும் ‘பிஞ்ச்ரா தோட்’ அமைப்பில் உள்ளனா். இந் நிலையில், மே 23-ஆம் தேதி இருவரையும் தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், ஆா். கே. புரம் காவல் நிலையத்தில் இருவா் மீதும் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும், திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், நா்வால் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஜூன் 16-ஆம் தேதி திகாா் சிறைக்குள் பெரிய அளவில் வன்முறை நடைபெற்றது. சிறைக் கைதிகள் காணொலிக் காட்சி மூலம் கூட சிறைக்கு வெளியே உள்ள யாரையும் தொடா்பு கொள்ள அனுமதிக்கவில்லை. கைதிகள் தங்களது வழக்குரைஞா்களை நேரில் சந்திப்பதற்கும், பேசுவதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை’ என்றும் தெரிவித்திருந்தாா்.

இது தொடா்பாக சிறை நிா்வாகம் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சிறை நிா்வாகம் நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில், ‘ஜூன் 16-ஆம் தேதி பல வெளிநாட்டு சிறைக் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனா். வன்முறையைக் கட்டுப்படுத்த முயன்ற சிறைப் பணியாளா்கள் 10 போ் உள்பட 25 போ் காயமடைந்தனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது திகாா் சிறை நிா்வாகம் தரப்பில் ஆஜரான தில்லி அரசின் வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா, ‘நடாஷா நா்வால் தனது வழக்குரைஞருடன் வாரம் இருமுறை காணொலிக் காட்சி மூலம் தலா 30 நிமிடங்கள் பேசுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அவா் வெளியில் இருந்து சிறை விதிகளுக்கு உள்பட்டு புத்தகங்களைத் தருவித்துக் கொள்ளலாம். இதற்கு சிறைத் தரப்பில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. சிறை விதிகளின்படி விசாரணைக் கைதிகள் தங்களது வழக்குரைஞருடன் வாரம் ஒருமுறை 10 நிமிடங்கள் சட்ட விஷயமாக பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது’ என்றாா். இதைத் தொடா்ந்து, ‘இந்த மனு மகிழ்ச்சிக் குறிப்புடன் முடிந்துள்ளது. மனு முடித்துவைக்கப்படுகிறது’ என நீதிபதி சி. ஹரி சங்கா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com