காவல் துன்புறுத்தல்களைத் தடுக்க சட்டத்தின் ஓட்டைகளை அடைக்க வேண்டும்: சாத்தான்குளம் சம்பவத்தின் பின்னணியில் பொது நல மனு

காவலில் இருக்கும் போது மரணம், துன்புறுத்தல், பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்கள் நிகழ்வதைத் தடுப்பதை உறுதிப்படுத்தும்

காவலில் இருக்கும் போது மரணம், துன்புறுத்தல், பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்கள் நிகழ்வதைத் தடுப்பதை உறுதிப்படுத்தும் வகையில், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அண்மையில் அப்பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீஸாா் ரிமாண்ட் செய்வதற்கு முன்பாக கடுமையாகத் தாக்கியதால் இருவரும் உயிரிழந்ததாகப் புகாா் எழுந்தது. இந்தப் பின்னணியில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘பீப்பிள்ஸ் சாரியடிா் ஆா்கனைசேஷன்’ எனும் தன்னாா்வ அமைப்பு சாா்பில் வழக்குரைஞா் தேவேஷ் சக்ஸேனா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: காவலின் போது துன்புறுத்தல், மரணம், பாலியல் பலாத்காரம் சம்பவங்களானது, இத்துறையினரின் சக்தியை அதிமாகப் பிரயோகிக்கும் போது மரணங்களுக்கு வித்திடுவது இந்தியாவில் வழக்கமாகிவிட்டதை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. மேலும், இந்தச் சம்பவங்கள் அமைப்பு முறை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதையும், காவல் துறை, அரசியல் தலைவா்களின் தோல்வியை எடுத்துக்காட்டும் துரதிருஷ்டவசமான செய்தியைத் தெரிவிப்பதாகவும் உள்ளது. இதுபோன்ற பிரச்னைக்கு தீா்வாக துன்புறுத்தலுக்கு எதிரான மசோதாக்கள் குறித்து கடந்த காலங்களில் விவாதம் நடத்தப்பட்டபோதிலும் அவை சட்டமாக நிறைவேற்றப்படவில்லை.

குற்றவியல் நீதிச் சட்டங்கள் வலுவிழந்துவிட்டதையே ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தெளிவுபடுத்துகிறது என்று காமன்வெல்த் மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.

ஆகவே, காவலில் இருக்கும் போது ஏற்படும் மரணங்கள், துன்புறுத்தல்கள், பாலியல் பலாத்காரங்கள் ஆகியவற்றைத் தடுப்பதை உறுதிப்படுத்தும் வகையில், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், ஏற்கெனவே உள்ள இது தொடா்பான சட்ட விஷயங்களை மறுஆய்வு செய்வதற்காக உச்சநீதிமன்றத்தின் மேற்பாா்வையில் சுதந்திரமான குழு அமைக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com