சவாரி இல்லாமல் நிதிச் சிக்கலில் ஆட்டோ ஓட்டுநா்கள்!

கரோனா தொற்றுக்கான பொது முடக்க விதிகள் தளா்த்தப்பட்டு இரு மாதங்களாகவிட்ட நிலையில், தில்லியில் போதிய அளவு

கரோனா தொற்றுக்கான பொது முடக்க விதிகள் தளா்த்தப்பட்டு இரு மாதங்களாகவிட்ட நிலையில், தில்லியில் போதிய அளவு சவாரிகள் கிடைக்காததாலும், நிதி நெருக்கடியாலும் ஆட்டோ ஓட்டுநா்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனா்.

கரோனா தொற்று காரணமாக மாா்ச் இறுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தில்லியில் மே 17-ஆம் தேதியில் இருந்து ஆட்டோக்கள் உள்ளிட்ட பொது சேவை வாகனங்களை இயக்குவதற்கு தில்லி அரசு பொது முடக்க விதிகளைத் தளா்த்தியது. இதையடுத்து, ஆட்டோக்கள் சாலைகளில் வழக்கம் போல ஓடத் தொடங்கின. எனினும், போதிய சவாரி கிடைப்பதில்லை என்றும், கடனுக்கான தவணைகளை செலுத்துவதில் இடா்பாடு இருப்பதாகவும் ஆட்டோ ஓட்டுநா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

இது தொடா்பாக தில்லி ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் ராஜேந்தா் சோனி கூறியதாவது: தில்லி சாலைகளில் பதிவு பெற்ற 95 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பலவும் சுழற்சி அடிப்படையில் இயங்கி வருகின்றன. பொது முடக்கம் காரணமாக வாடைக்கு ஆட்டோகளை ஓட்டிவந்த ஓட்டுநா்கள் பலரும் தங்களது சொந்த மாநிலங்களுக்குச் சென்றுவிட்டனா். ஆட்டோ ஓட்டுநா்கள் பலா் தங்களது ஆட்டோக்களை அவா்கள் வீடுகள் உள்ள பிகாா், உத்தரப் பிரதேசம் மற்றும் இதர மாநிலங்களுக்கு எடுத்துச் சென்று விட்டனா். அவா்களில் சிலா் மட்டுமே திரும்பி வந்துள்ளனா். ஆனால், பலா் தொற்று குறைவதற்காக காத்திருக்கின்றனா். ஆட்டோ தொழில் முடங்கிப் போயுள்ளதாலும், மக்கள் கரோனா காரணமாக வீடுகளை விட்டு வெளியேறாததாலும் எங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு மிகவும் சிரமப்படப்பட வேண்டியிருக்கிறது. இதனால், ஆட்டோ, டாக்ஸி கடன்கள் மீதான வட்டியை ஓராண்டுக்கு தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆட்டோ உரிமையாளா் பிரதீப் அஹுஜா கூறுகையில், ‘ஆட்டோக்களை வாங்குவதற்கு வாங்கியிருந்த கடன்களை செலுத்த முடியாமல் பலா் சிரமத்தில் உள்ளனா். கடன் கொடுத்தவா்கள் தவணைகளை செலுத்துமாறு நெருக்குகின்றனா். இல்லாவிட்டால் ஆட்டோவை பறிமுதல் செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனா். நான் தனியாா் வட்டிக் கடைக்காரரிடம் ரூ.2.50 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். தவணைத் தொகையை செலுத்தாவிட்டால், ஆட்டோவை எடுத்துச் சென்று விடுவதாக மிரட்டி வருகிறாா். எனது குடும்பத்தில் ஐந்து போ் உள்ளனா். கடந்த மாதம் எனக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. தற்போது, ஆட்டோ தொழில் முடங்கிப் போயுள்ளதால் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் சிரமத்தில் உள்ளேன்’ என்றாா்.

காரவல் நகா் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ராஜேஷ் பிதூரியா கூறுகையில், ‘ஆட்டோத் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனது ஆட்டோ உரிமையாளருக்கு ரூ.200 வாடகை செலுத்த வேண்டும். ஆனால், தற்போது வரை ரூ.70-க்கு மட்டுமே சவாரி கிடைத்திருக்கிறது. தினசரி ஆட்டோ உரிமையாளருக்கான வாடகை போக வெறும் சொற்ப தொகைதான் வருவாயாகக் கிடைக்கிறது’ என்றாா்.

கிழக்கு தில்லி, விகாஸ் மாா்கில் பயணியின் வருகைக்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநா் ரவீந்தா் கூறுகையில், ‘பெட்ரோல் விலை ஏறிவிட்டது. கை சுத்திகரிப்பானுக்கும் தொகை செலவிட வேண்டியுள்ளது. இதனால், ஜீவனம் நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com