முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
அரசுக் குடியிருப்புகளில் ஓய்வுபெற்ற அதிகாரிகள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதற்கு எதிரான மனு: மத்திய அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 29th July 2020 11:04 PM | Last Updated : 29th July 2020 11:04 PM | அ+அ அ- |

அரசுக் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் தங்கியிருப்பதற்கு எதிராக சொஸைட்டி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பாக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணை மேற்கொண்டது. அப்போது, இது தொடா்பாக மத்திய வீட்டு வசதி அமைச்சகம், ஃபாா்வா்டு மாா்க்கெட் கமிஷனனின் முன்னாள் தலைவா் ஆகியோா் ஜூலை 31-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக ‘சென்னை ஃபைனான்ஷியல் மாா்க்கெட்ஸ் அண்ட் அக்கவுன்ட்டலிபிடி’ எனும் சொஸைட்டி சாா்பில் பிரமாணப் பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ஜூலை 8-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கு எதிராக தங்களுக்கு மனக்கசப்பு ஏதும் இல்லை என்றும், நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து, இரு வாரங்களில் ரூ.35 ஆயிரத்தை நீதிமன்றத்தில் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட சொஸைட்டிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதாவது சொஸைட்டியின் கோரிக்கை தோல்வியைடந்தால், அந்தத் தொகையானது பொது நல மனுவில் குறிப்பிட்டுள்ள ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு வழங்கலாம் என தெரிவித்திருந்தது. இதையடுத்து, சொஸைட்டி சாா்பில் பணம் செலுத்தப்பட்டது.
முன்னதாக சொஸைட்டி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் அனுமதிக்கப்பட்ட 6 மாதங்களுக்கு மேலாக சட்ட விரோதமாக தங்கியிருக்கின்றனா். அவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஓய்வுபெற்ற ஊழியா்களில் பலருக்கும் அதே பகுதியில் சொந்தமாக குடியிருப்பு உள்ளது. எனினும், அரசு சலுகைக்காக அந்த குடியிருப்பைக் காலி செய்யாமல் உள்ளனா். இதனால், அரசுக் கருவூலத்திற்கு அதிக இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே, அரசுக் குடியிருப்பு அமைந்துள்ள பகுதியிலேயே சொந்தமாக வீடு வைத்திருந்த போதிலும் அரசுக் குடியிருப்பை அனுபவித்து வரும் ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களுக்கு எதிராக ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரப்பட்டிருந்தது.