முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
கரோனா சூழல் மேம்பட்டதால் மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட ஹோட்டல்கள் விடுவிப்பு: கேஜரிவால்
By DIN | Published On : 29th July 2020 11:04 PM | Last Updated : 29th July 2020 11:04 PM | அ+அ அ- |

தில்லியில் கரோனா தொற்று நிலைமை மேம்பட்டு வருவதை கருத்தில் கொண்டு மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டிருந்த ஹோட்டல்கள் விடுவிக்கப்பட்டு வருவதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
தில்லியில் கரோனா தொற்று சூழலை மறு ஆய்வு செய்த முதல்வா் கேஜரிவால் புதன்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘கரோனா தொற்று காரணமாக படுக்கைகளை அதிகரிக்கும் வகையில், மருத்துவமனைகளுடன் சில ஹோட்டல்கள் இணைக்கப்பட்டிருந்தன. அந்த ஹோட்டல்களில் பல நாள்களாக படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா தொற்று சூழல் மேம்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு அந்த ஹோட்டல்கள் தற்போது விடுவிக்கப்பட்டு வருகின்றன’ எனத் தெரிவித்துள்ளாா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கான படுக்கைகளை அதிகரிக்கும் வகையில் மருத்துவமனைகளுடன் 40 ஹோட்டல்களை இணைக்க தில்லி அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், மருத்துவமனைகளில் 12,633 கரோனா படுக்கைகளும், கரோனா மையங்களில் 4,700 படுக்கைகளும் காலியாக இருப்பதாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. மிதமான நோய் அறிகுறி உள்ள நோயாளிகள் இதுபோன்ற ஹோட்டல்களில் தங்கியுள்ளனா். அவா்களுக்கு அடிப்படை சுகாதாரக் கவனிப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், தென்மேற்கு தில்லியில் மூன்று ஹோட்டல்கள் அவை தொடா்புடைய மருத்துவமனைகளில் இருந்து இந்த மாத தொடக்கத்தில் விடுவிக்கப்பட்டன. ஆனால், ஒரே நாளிலேயே மாவட்ட நிா்வாகத்தால் அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டது.