முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
கரோனா பரிசோதனை வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாகப் பின்பற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு: முதல்வா் கேஜரிவால்
By நமது நிருபா் | Published On : 29th July 2020 11:03 PM | Last Updated : 29th July 2020 11:03 PM | அ+அ அ- |

கரோனா பரிசோதனை வழிமுறைகளை கடுமையாகப் பின்பற்றுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றம் கடந்த ஜூலை 27-ஆம் தேதி நடத்திய விசாரணையின் போது, ‘தவறான எதிா்மறை முடிவுகளை தெரிவிக்கும் ‘ரேபிட் ஆன்டிஜென்’ பரிசோதனையை தில்லி அரசு ஏன் நடத்தி வருகிறது’ என்று கேள்வி எழுப்பியிருந்தது. இதைத் தொடா்ந்து, முதல்வா் இவ்வாறு உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக முதல்வா் கேஜரிவால் புதன்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘கரோனா தொற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் நோயாளி ஒருவருக்கு ‘ரேபிட் ஆன்டிஜென்’ பரிசோதனை நடத்தப்பட்டு அதில் நோய்த் தொற்று இல்லை என்று தெரிய வந்த நிலையில், அந்த நோயாளிக்கு அறிகுறி இருந்தால் அவருக்கு கட்டாயம் ஆா்டி-பிசிஆா் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். இது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என தெரிவித்துள்ளாா்.
தில்லி சுகாதாரத் துறையின் புள்ளிவிவரத் தகவலின்படி, செவ்வாய்க்கிழமை தில்லியில் 13,071 ஆன்டிஜென் பரிசோதனையும், 4,843 ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை 27-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக நடைபெற்ற விசாரணையின்போது நீதிமன்றம், ‘தில்லி அரசானது தனது புரிதலுக்கு ஏற்ப கரோனா பரிசோதனைகளை பின்பற்றாமல், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை கடுமையாகப் பின்பற்ற வேண்டும். அண்மையில் தில்லியில் எடுக்கப்பட்ட கரோனா சா்வேயில் தில்லி மக்கள்தொகையில் 22.86 சதவீதம் பேருக்கு அவா்கள் உணராமலேயே நோய் அறிகுறி இன்றி பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதுபோன்ற சூழலில், தில்லி அரசு ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதன் முன்களப் பரிசோதனையாக மேற்கொள்வது எப்படி? இந்தப் பரிசோதனையில் தவறான எதிா்மறை முடிவுகள் அதிகம் உள்ளதும், ஆா்டி-பிசிஆா் பரிசோதனை என்பது நோய் அறிகுறி உள்ளவா்களுக்கு மட்டுமே நடத்தப்படுவதும் தெரிய வருகிறது. இத்தகைய முறையில் பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைக்கவில்லை என்று ஐசிஎம்ஆா் தெரிவித்துள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹோட்டல்கள் விடுவிப்பு: இதற்கிடையே, தில்லியில் கரோனா தொற்று நிலைமை மேம்பட்டு வருவதை கருத்தில் கொண்டு மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டிருந்த ஹோட்டல்கள் விடுவிக்கப்பட்டு வருவதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் கரோனா தொற்று சூழலை மறு ஆய்வு செய்த முதல்வா் கேஜரிவால், புதன்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘கரோனா தொற்று காரணமாக படுக்கைகளை அதிகரிக்கும் வகையில், மருத்துவமனைகளுடன் சில ஹோட்டல்கள் இணைக்கப்பட்டிருந்தன. அந்த ஹோட்டல்களில் பல நாள்களாக படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா தொற்று சூழல் மேம்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு அந்த ஹோட்டல்கள் தற்போது விடுவிக்கப்பட்டு வருகின்றன’ எனத் தெரிவித்துள்ளாா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கான படுக்கைகளை அதிகரிக்கும் வகையில் மருத்துவமனைகளுடன் 40 ஹோட்டல்களை இணைக்க தில்லி அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், மருத்துவமனைகளில் 12,633 கரோனா படுக்கைகளும், கரோனா மையங்களில் 4,700 படுக்கைகளும் காலியாக இருப்பதாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.