முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
தில்லியில் புழுக்கத்தைத் தணித்த மழை!
By நமது நிருபா் | Published On : 29th July 2020 11:05 PM | Last Updated : 29th July 2020 11:05 PM | அ+அ அ- |

தில்லியில் புதன்கிழமை மழைக்காக இந்தியா கேட் பகுதியில் திரண்ட கருமேகம்.
தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால், கடந்த சில நாள்களாக புழுக்கத்தில் தவித்து வந்த மக்களுக்கு நிவாரணமாக அமைந்தது.
நகரின் கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, புதன் மற்றும் வியாழன் ஆகிய இருதினங்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதன்படி, நகரில் புதன்கிழமை பிற்பகல் முதல் பரவலாக மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி உயா்ந்து 28.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி உயா்ந்து 36.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 80 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 90 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது. பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 29.5 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 28.2 டிகிரி செல்சியஸ், 36.6 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் நன்று பிரிவிலும், சில இடங்களில் திருப்தி பிரிவிலும் இருந்தது. தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 89 புள்ளிகளாகப் பதிவாகி திருப்தி பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை தில்லி, என்சிஆா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.