முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
மருத்துவப் படிப்புகளில் ஓபிசியினருக்கு இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தில் திமுக சாா்பில் கேவியட் மனு தாக்கல்
By நமது நிருபா் | Published On : 29th July 2020 12:08 AM | Last Updated : 29th July 2020 12:08 AM | அ+அ அ- |

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக மத்திய அரசு மூன்று மாதங்களில் அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவா்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக,பாமக, மதிமுக மற்றும் தமிழக சுகாதாரத் துரை சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
அதில், ‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளும், மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளும் முடிவு எடுக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அடுத்த கல்வியாண்டு முதல் இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக மத்திய பொது சுகாதாரப் பணிகள் இயக்குநா், தமிழக சுகாதாரத் துறை செயலா் மற்றும் மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில் செயலா்கள் கூட்டத்தைக் கூட்டி இறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவின் அடிப்படையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் எத்தனை சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது என்பது குறித்து மத்திய அரசு மூன்று மாதங்களில் அறிவிக்க வேண்டும்’ என நீதிபதிகள் தீா்ப்பில் குறிப்பிட்டிருந்தனா்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் செவ்வாய்க்கிழமை கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒபிசி வகுப்பினா் இடஒதுக்கீடு விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக மத்திய அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யும்பட்சத்தில், தங்களது தரப்பு பதிலை கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது என கோரி இந்த கேவியட் மனுவை திமுக தரப்பில் வழக்குரைஞா் டி.குமணன் தாக்கல் செய்துள்ளாா்.