முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
டி.யு.வில் நாட்டியப் படிப்புகள் தொடங்க கோரிய மனுவை விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு
By DIN | Published On : 29th July 2020 12:10 AM | Last Updated : 29th July 2020 12:10 AM | அ+அ அ- |

தில்லி பல்கலைக்கழகத்தில் (டி.யு.) நாட்டியப் படிப்புகள் தொடங்கக் கோரி தாக்கலான மனுவை விசாரிக்க உயா்நீதின்றம் மறுத்துவிட்டது.
இது தொடா்பான மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘எந்தப் படிப்பை பயிற்றுவிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகத்திடம் நீதிமன்றம் கூற முடியாது என்பதால், இந்த விவகாரத்தில் இதுபோன்ற எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. நாட்டில் நாட்டியப் படிப்புகளைக் கற்றுத் தருவதற்கு என நிறுவனங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதால் மனுதாரா் அங்கு சென்று கோரலாம். தில்லியில்தான் எல்லாம் இருக்க வேண்டும் என்று ஏன் விரும்புகிறீா்கள்? இந்த மனுவை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் தள்ளுபடி செய்யப்படும்’ எனத் தெரிவித்தது. இதையடுத்து, மனுதாரா் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டாா்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா் தாக்கல் செய்த மனுவில், ‘தில்லி பல்கலைக்கழகம் இளநிலை, முதுநிலைப் படிப்புகளை வாய்ப்பாட்டு பிரிவில் வழங்கி வருவதால், தாளக் கருவிகள் இசை, நாட்டியம் ஆகியவற்றிலும் படிப்புகளைக் கற்றுத் தர வேண்டும். பல்கலைக்கழகத்தில் நாட்டியம் கற்றுத் தராவிட்டால், அது பள்ளிகளில் நாட்டியத்தில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு எதிரான பாகுபாடாக அமைந்துவிடும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.