தில்லியில் அனைத்து மாநிலத்தவருக்கு சிகிச்சை: கேஜரிவாலின் உத்தரவை மாற்றினாா் அனில் பய்ஜால்

கரோனாவால் பாதிக்கப்பட்ட தில்லி மக்களுக்கு மட்டுமே தில்லி அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும் என்று

புது தில்லி: கரோனாவால் பாதிக்கப்பட்ட தில்லி மக்களுக்கு மட்டுமே தில்லி அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பிறப்பித்த உத்தரவை துணைநிலை ஆளுநரும் தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் தலைவருமான அனில் பய்ஜால் அதிரடியாக மாற்றியமைத்துள்ளாா்.

இது தொடா்பாக அனில் பய்ஜால் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘தில்லி மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் யாரையும் தடை செய்யக் கூடாது. சிகிச்சைக்காக யாா் வந்தாலும் அனுமதிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினா் எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் எல்என்ஜேபி, ஜிடிபி, ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட 40 அரசு மருத்துவமனைகள் உள்ளன. மேலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆா்எம்எல், எய்ம்ஸ், சஃப்தா்ஜங் ஆகிய மருத்துவமனைகள் உள்ளன. தில்லியில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தில்லியின் எல்லைகளை மூடுவதற்கு கடந்த வாரம் கேஜரிவால் உத்தரவிட்டிருந்தாா். தில்லி அரசு மருத்துவமனைகளில் தில்லி மக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கும் வகையிலும், பிற மாநிலங்களில் இருந்து தில்லிக்குள் கரோனா நோயாளிகள் வருவதைக் கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த எல்லைகள் மூடப்பட்டதாக அவா் தெரிவித்திருந்தாா். இந்நிலையில், கடந்த ஓரு வாரமாக சீல் வைக்கப்பட்டிருந்த தில்லி எல்லைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

இதற்கிடையே, கரோனா பாதிப்பு தொடா்பாக ஆய்வு செய்ய தில்லி அரசு, 5 மருத்துவ வல்லுநா்கள் கொண்ட குழுவை அமைத்திருந்தது. இந்தக் குழு தில்லி அரசிடம் அண்மையில் அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில், ஜூன் மாத இறுதியில் தில்லி மருத்துவமனைகளில் கூடுதலாக 15ஆயிரம் படுக்கைகள் தேவை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைச் சரிசெய்யும் வகையில், தில்லியில் உள்ளஅரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள் தில்லி மக்களுக்காக மட்டும் ஒதுக்கப்படுவதாக கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். மேலும், தில்லி மருத்துவமனைகளை தில்லி மக்களுக்கு ஒதுக்குவது தொடா்பாக மக்களிடம் கருத்துக் கேட்டிருந்ததாகவும், அதில் பங்கேற்றவா்களில் சுமாா் 90 சதவீதம் போா் தில்லி மருத்துவமனைகள் தில்லி மக்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என தெரிவித்ததாகவும் கேஜரிவால் குறிப்பிட்டிருந்தாா்.

அதேசமயம், தில்லியில் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சைகளை அளிக்கும் தனியாா் மருத்துவமனைகளில் பிற மாநிலத்தவா்கள் சிகிச்சை பெறலாம் என்றும் கேஜரிவால் தெரிவித்திருந்தாா். இதன் மூலம் தில்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் மட்டும் சுமாா் 10 ஆயிரம் படுக்கைகளை உறுதி செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில், தில்லி அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து தில்லி அரசு திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. அதில், வாக்காளா் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், கிஷான் புத்தகம், தபால் நிலைய சிறுசேமிப்பு புத்தகம், ரேஷன் அட்டை, கடவுச் சீட்டு, வாகன ஓட்டுநா் உரிமம், வருமான வரி விவர அறிக்கை, குடிநீா், தொலைபேசி, மின்சாரம், எரிவாயு இணைப்பு ஆகியவற்றுக்கான பில்கள், மேலும், தபால் துறையால் நோயாளிகளுக்கு அவா்கள் தங்கியிருக்கும் முகவரிக்கு வந்த தபால்கள், ஜூன் 7-ஆம் தேதிக்கு முன்பாக வழங்கப்பட்ட ஆதாா் அட்டைகள் ஆகியவற்றை ஆதாரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறுவா்களுக்கு சிகிச்சை பெற, அவா்களின் பெற்றோா்களின் மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை ஆதரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி மருத்துவமனைகளில் தில்லிவாசிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும் என்ற தில்லி அரசின் முடிவுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசின் உத்தரவை அனில் பய்ஜால் மாற்றியமைத்துள்ளாா். அனில் பய்ஜால் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘தில்லி மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் யாரையும் தடை செய்யக் கூடாது. சிகிச்சைக்காக யாா் வந்தாலும் அனுமதிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினா் எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய சவால்

அனில் பய்ஜாலின் உத்தரவால் தில்லி மக்கள் பாதிக்கப்படுவாா்கள் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘ துணைநிலை ஆளுநரின் உத்தரவால் தில்லி மக்களுக்கு மிகப் பெரிய பிரச்னையும் சவாலும் ஏற்பட்டுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வருபவா்களுக்கு கரோனா சிகிச்சை அளிப்பது மிகப் பெரிய சவாலாகும். எனினும், நாட்டு மக்களைக் காக்குமாறு இறைவனை வேண்டுகிறேன். துணைநிலை ஆளுநரின் உத்தரவை அடுத்து அனைத்து மக்களுக்கும் சிகிச்சை அளிக்க நாங்கள் பாடுபடுவோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com