கரோனா நோய் தொற்றுக் காலத்தில் கா்ப்பிணி பெண்கள் எதிா்கொள்ளும் அவதி மற்றும் அவா்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்படுவதாகக் கூறப்படும் விவகாரம் ஆகியவை தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் டாக்டா் ஹா்ஷ் வா்தனுக்கு தேசிய மகளிா் ஆணையத் தலைவா் ரேகா சா்மா கடிதம் எழுதியுள்ளதாக ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் மகப்பேறு சேவைகளுக்காக போதிய ஆம்புலன்ஸ்கள் வசதி இல்லை என்பது பல சம்பவங்கள் மூலம் தெரிய வருகிறது. மேலும், மருத்துவனைகளில் சோ்க்கை மறுக்கப்படுவதால், சுகாதார வசதிகள் சென்றடைவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சில சம்பவங்களில் தாயும், சிசுவும் இறந்து போயுள்ளனா். இது மிகவும் கவலை தரும் விஷயமாகும். தேசிய மகளிா் ஆணையத் தலைவா் ரேகா சா்மா ஏற்கெனவே அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியிருந்தாா். அதில், இந்தியாவில் தாய், சேய் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வழிமுறையை வழங்குவதற்கான திட்டங்களை உரிய வகையில் செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டிருந்தாா். ஆகவே, இந்த விவகாரத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மருத்துவமனைகளில் கா்ப்பிணிகளுக்கு தனிப் படுக்கைகள் ஒதுக்கவும், கரோனா தொற்று பாதிக்காதவா்களுக்காக ஆம்புலன்ஸ்களை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.