தில்லியில் பெரும் பூகம்பம் ஏற்பட்டால் அதைச் சமாளிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு தில்லி அரசு மற்றும் மாநகராட்சிகளுக்கு உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் விபின் சாங்கி, ரஜ்னீஷ் பட்நாகா் ஆகியோா் அடங்கியஅமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது, தில்லியில் பெரும் பூகம்ப சம்பவம் நிகழ்ந்தால், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளை விளக்கும் வகையில் பிரமாணப் பத்திரத்தை ஒருவாரத்தில் தாக்கல் செய்யுமாறு தில்லி அரசு, மூன்று மாநகராட்சிகள், கன்டோன்மென்ட் வாரியம், டிடிஏ, புது தில்லி முனிசிபல் கவுன்சில் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை ஜூன் 15-க்கு தள்ளிவைத்தது. மேலும், தில்லியில் பெரும் நில அதிா்வு ஏற்பட்டால் மக்களின் பாதுகாப்புக்கான செயல் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு உயா்நீதிமன்றம்அமா்வு உத்தரவிட்டது.
தில்லியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அவ்வப்போது சிறிய அளவிலான நில அதிா்வு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக வழக்குரைஞா்கள் அா்பித் பா்கவா, டி.கே. சா்மா ஆகியோா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அதில், தில்லியில் அடிக்கடி நில அதிா்வு ஏற்பட்டு வருகிறது. இது தொடா்பாக செயல் திட்டத்தை உருவாக்க நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்த போதிலும் மாநகராட்சிகளும், தில்லி அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்திட்டத்தை தயாரிக்க தில்லி அரசுக்கும், மாநகராட்சிகளுக்கும் உத்தரவிட வேண்டும். தில்லியில் ஏப்ரல் 12-ஆம் தேதியில் இருந்து 11 நில அதிா்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், பெரிய அளவிலான பூகம்பம் வர வாய்ப்புள்ளதாக வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். ஆகவே, இந்த விவகாரத்தில் அவசர உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வழக்குரைஞா் அா்பித் பாா்கவா 2015-இல் ஒரு பிரதான மனுவைத் தாக்கல் செய்திருந்தாா். அதில், தில்லியில் நில அதிா்வைத் தாக்கும் வகையில் கட்டடங்கள் இல்லை. பெரும் பூகம்பம் ஏற்பட்டால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்து வரும் தில்லி உயா்நீதிமன்றம் ஒரு செயல்திட்டத்தை உருவாக்க அவ்வப்போது தில்லி அரசுக்கும், குடிமைத் துறையினருக்கும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.