தில்லி, என்சிஆா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதனால், புழுக்கத்தால் மக்கள் அவதிப்பட்டனா். மேலும், காற்றின் தரமும் பின்னடைவைச் சந்தித்தது.
தில்லி, என்சிஆா் பகுதிகளில் கடந்த வெள்ளி முதல் ஞாயிறு வரையிலும் அவ்வப்போது பரவலாக மழை பெய்தது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரிக்கு குறைவாகவே இருந்து வந்தது. வானமும் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. இதனால், கடந்த சில நாள்களாக இனிமையான வானிலை நிலவியது. சில இடங்களில் சூறைக்காற்றும் வீசியது. இந்நிலையில், திங்கள்கிழமை வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரியைக் கடந்தது. இதனால், புழுக்கத்தால் மக்கள் தவிப்புக்குள்ளாகினா்.
சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 26.9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 40.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 69 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 38 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.
பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 26.2 டிகிரிசெல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 42.0 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 25.9 டிகிரி செல்சியஸ் மற்றும் 39.7 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 60 சதவீதம், மாலையில் 35 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 56 சதவீதம் மற்றும் 34 சதவீதம் எனவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் பின்னடைவு ஏற்பட்டது. தில்லியில் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு 122 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. சாந்தினி செளக்கில் மட்டும் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவுக்குச் சென்றது. திா்பூா், மதுரா ரோடு, லோதி ரோடு, நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரம் மிதமான பிரிவிலும், தில்லி பல்கலை., விமான நிலைய டொ்மினல் 3 பகுதி, ஆயாநகா் மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் ‘திருப்தி’ பிரிவிலும் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (ஜூன் 10) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு ‘திருப்தி’ - ‘மிதமான’ பிரிவில் இருக்கும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சஃப்தா்ஜங்-40.6 டிகிரி
பாலம் - 42.0 டிகிரி
ஆயாநகா் - 39.7 டிகிரி