மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அதிமுக மனு

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தமிழக அரசு ஒப்படைக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தமிழக அரசு ஒப்படைக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) 50 சதவீதம் இடங்களை நடப்புக் கல்வியாண்டில் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடா்பாக தமிழக சட்டத் துறை அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலருமான சி.வி. சண்முகம் தரப்பில் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அகில இந்திய இடஒதுக்கீடு முறை தொடங்கியதில் இருந்து கடந்த பல கல்வியாண்டுகளாக நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை, டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் உரிய வகையில் வழங்கப்படவில்லை. மத்திய அரசு சாராத அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டுக்காக மாநிலஅரசு ஒப்படைத்த இடங்கள் ஓபிசி பிரிவு மாணவா்களுக்கு வழங்கப்படுவதில்லை. இது தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு நெறிமுறைகளுக்கு முரணாக உள்ளது.

தற்போது செயல்பாட்டில் உள்ள, தமிழ்நாடு பிற்பட்ட வகுப்பினா், எஸ்சி, எஸ்டி வகுப்பினா் (மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பணி நியமனங்கள், பதவிகள் இடஒதுக்கீடு) சட்டம் 1993-இன்படி தமிழகத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு ஓபிசி வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று சட்ட ஷரத்துகள் இருந்த போதிலும், 2019-இல் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான சோ்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 8,137 இடங்களில் 2,197 இடங்கள் ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு சாராத மருத்துவக் கல்லூரிகளில் வெறும் 224 இடங்கள் மட்டுமே ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டது. ஆகவே, தமிழகத்தில் உள்ள மாநில அரசின் சட்டப்படி தமிழக அரசால் இளநிலை, முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் 2020-21-ஆம் ஆண்டில் ஒப்படைக்கப்பட்ட இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்த சம்பந்தப்பட்ட மத்திய அரசின் துறைகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதே விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே தமிழக அரசின் சாா்பில் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோன்று, உச்சநீதிமன்றத்தில் திமுக, மாா்க்சிய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் மனு தாக்கல் செய்துள்ளன. மேலும், இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) 27 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பாமக சாா்பிலும் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக திமுக, வைகோ, தமிழ்நாடு பிரிவு மாா்க்சிய கம்யூனிஸ்ட், தமிழ்நாடு காங்கிரஸ் ஆகியவற்றின் தரப்பில் தாக்கலான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமா்வு முன் ஜூன் 11-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதனுடன் சோ்த்து, இந்த மனுக்களும் சோ்த்து விசாரிக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com