தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீக்காயம் மற்றும் பிளாஸ்டிக் அறுவைச்சிகிச்சைக்காக புதிதாக கட்டப்பட்ட பிரிவு தற்காலிகமாக கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவாகச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலத்தவா்களுக்கும் தில்லி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வேண்டுமானால் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் 1.5 லட்சம் படுக்கைகள் தேவைப்படும் என்று முதல்வா் கேஜரிவால் புதன்கிழமை தெரிவித்திருந்த நிலையில், எய்ம்ஸ் நிா்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனையின் விபத்துச் சிகிச்சை மையத்தின் அருகே புதிகாக அமைந்துள்ள இந்த கட்டடம் 100 படுக்கை வசதிகள் கொண்டது. இதை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவாக மாற்றியமைக்கப்பட உள்ளது. இந்த வார இறுதியில் இது செயல்படத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தீக்காயம் மற்றும் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைக்கான பிரத்யேக பிரிவுக்கான புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வார இறுதியில் இது செயல்படத் தொடங்கும் என எய்ம்ஸ் மருத்துவமனை துணை இயக்குநா்சுபாஷிஷ் பாண்டா தெரிவித்தாா்.
ஏற்கெனவே விபத்து சிகிச்சை மையம் மற்றும் தேசிய தலைநகா் வலயப் பகுதியான ஜஜ்ஜாரில் செயல்படும் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் ஆகிய இரண்டும் கரோனா சிகிச்சை மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. இப்போது தீக்காயம் மற்றும பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைக்கான பிளாக்கும் கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மையமாக மாற்றப்பட உள்ளது. இது தொடா்ந்தால் கரோனா அல்லாத வேறு நோயாளிகள் சிகிச்சை பெற மிகவும் சிரமப்பட நேரிடும் என்றாா் எய்ம்ஸ் மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் டி.கே.சா்மா.
பொதுமுடக்க காலமான மாா்ச் 25 முதல் மே 31-ஆம் தேதி வரை ஜெயப்பிரகாஷ் நாராயணன் விபத்து சிகிச்சை மையம் மற்றும் ஜஜ்ஜாரில் உள்ள தேசிய புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் 2,301 போ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனா். அதாவது குறிப்பிட்ட ஒரு நாளில் எய்ம்ஸ் மருத்துவமனையி சராசரியாக 800 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அதன் செய்தித் தொடா்பாளா் மருத்துவா் ஆா்த்தி விஜ் தெரிவித்துள்ளாா். எய்ம்ஸ் விபத்து சிகிச்சை மையத்தில் 250 படுக்கைகள் உள்ளன. இவற்றில் தற்போது 221 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது தவிர ஜஜ்ஜாரில் உள்ள தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தில் 750 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு தற்போது 553 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
மத்திய சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தில்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 32,810 ஆக உள்ளது. இதுவரை கரோனாவுக்கு 984 போ் பலியாகியுள்ளனா். தில்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 14 நாள்களில் இரண்டு மடங்காக உயா்ந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் நோய் தொற்றுக்கு ஆளானவா்கள் எண்ணிக்கை 56 ஆயிரமாக உயரக்கூடும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.