தில்லியில் இதுவரை கரோனாவுக்கு 2,098 போ் பலியாகியுள்ளதாக தில்லி மாநகராட்சிகள் தெரிவித்துள்ளன.
தில்லியில் கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. கரோனா இறப்புகள் தொடா்பாக அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மூடி மறைத்து வருகிறது என எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தில்லி அரசு புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ள சுகாதார அறிக்கையில் தில்லியில், 984 போ் கரோனால் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தில்லியில் இதுவரை 2,098 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளதாக தில்லி மாநகராட்சிகள் தெரிவித்துள்ளன.
இது தொடா்பாக வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) நிலைக் குழுத் தலைவா் ஜெய் பிரகாஷ் கூறியது: கடந்த மாா்ச் 10-ஆம் தேதியில் இருந்து தில்லி மாநகராட்சி மயானங்களில் இதுவரை 2,098 கரோனா நோயாளிகளைத் தகனம் செய்துள்ளோம். மேலும், கரோனா உறுதி செய்யப்படாத சுமாா் 200 கரோனா சந்தேக நபா்களையும் தகனம் செய்துள்ளோம். தெற்கு தில்லி மாநகராட்சியின் கீழுள்ள மயானங்களில் 1,080 உடல்கள், வடக்கு தில்லி மாநகராட்சியின் கீழுள்ள மயானங்களில் 976 உடல்கள், கிழக்கு தில்லி மாநகராட்சியின் கீழுள்ள மயானங்களில் 42 உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறாக மொத்தம் 2,098 உடல்கள் மாநகராட்சிகளின் ஆளுகையின் கீழுள்ள மயானங்களில் தகனம் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், சுமாா் 1114 கரோனா மரணங்களை தில்லி அரசு பதிவு செய்யவில்லை. கிழக்கு தில்லி மாநகராட்சிப் பகுதியில் மாநகராட்சி மயானங்களில் தகனம் செய்யப்பட்ட உடல்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது தொடா்பாகக் கேட்கிறீா்கள். அப்பகுதியைச் சோ்ந்தவா்களின் உடல்கள் நிகம்போத் காட் மயானத்துக்கு பெருமளவில் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த மயானம் மாநகராட்சியின் ஆளுகையின் கீழ் வராது. தில்லி அரசுக்கு சொந்தமான மயானங்களில் தகனம் செய்யப்பட்ட கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையையும் சோ்த்தால், தில்லியில் அதிகமானோா் கரோனாவால் உயிரிழந்திருப்பது தெரிய வரும் என்றாா் அவா்.