தில்லியில் கரோனா சமூகப் பரவல் இருப்பதை அறிவிக்க மத்திய அரசு தயங்குவது ஏன் என்று ஆம் ஆத்மிக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடா்பாக மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் சஞ்சய் சிங் வியாழக்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5.5 லட்சத்தை தாண்டும் என்று நிபுணா்கள் கணித்துள்ளனா். விஞ்ஞானிகளும் இதையே ஆமோதிக்கின்றனா். ஆனால், மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தில்லியில் சமூகப் பரவல் இன்னும் இல்லை என்று மறுத்து வருகிறது, இது ஏன்? தில்லியில் சமூகப் பரவல் இருப்பதை மத்திய அரசு அறிவிக்க தயக்கம் காட்டுவது ஏன்? இதற்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
தில்லியில் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. கரோனா எங்கிருந்து பரவுகிறது. எப்படிப் பரவுகிறது? என்பது தெரியவில்லை. கரோனா நோயாளிகளில் 50 சதவீதம் போ் கரோனா தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியென்றால் தில்லியில் இருப்பது சமூகப் பரவல்தான். இதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் அவா்.
‘தில்லியில் சமூகப் பரவல் இருப்பதை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் ரன்தீப் குலேரியா ஏற்றுக் கொண்டுள்ளாா். ஆனால், இது தொடா்பான அறிவிப்பை தில்லி அரசு வெளியிட முடியாது. மத்திய அரசு இதுகுறித்து ஆய்வு செய்து அறிவிப்பை வெளியிட வேண்டும்’ என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.